தமிழகத்தில் அழிந்து வரும் 320 கோடி ஆண்டுகள் பழமையான குன்றுகள்: அரசு அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் சட்டவிரோத கல் குவாரி நடவடிக்கைகளால் சுமார் 320 கோடி ஆண்டுகள் பழமையான 10 குன்றுகள் அழிந்துவிட்டதாக அமைச்சர் டி.கே. பிரபு பேரவையில் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் முறையற்ற மற்றும் சட்டவிரோத கல் குவாரி தொழிலால், மாநிலத்தின் நிலப்பரப்பில் இருந்த சுமார் 320 கோடி ஆண்டுகள் பழமையான 10 குன்றுகள் மற்றும் மலைப்பகுதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு சட்டப்பேரவையில் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். மனித நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே புவியியல் ரீதியாக உருவான இந்த பழமையான மலைத்தொடர்கள், கட்டுமானப் பணிகளுக்கான எம்-சாண்ட் (M-Sand) மற்றும் ஜல்லி கற்களுக்காக தொடர்ந்து சுரண்டப்பட்டதன் விளைவாக காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மலைகளின் புவியியல் பரவலை விளக்கிய அமைச்சர், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 குன்றுகளும், மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தலா 2 குன்றுகளும், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தலா ஒரு குன்றும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இத்தகைய அழிவுகள் பெரும்பாலும் 2021-ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிகளவில் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோத சுரங்கப் பணிகளை ஒடுக்க அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், தென்காசி மாவட்டத்தில் மட்டும் அனுமதியின்றி கனிமங்களைக் கடத்திய 250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கனிமக் கொள்ளையைத் தடுக்க 499 குவாரிகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு, அதில் 309 குவாரிகளுக்கு எதிராக சுமார் 500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கட்டுமானப் பொருட்களுக்கான தேவையை நிவர்த்தி செய்யவும், வருவாயை அதிகரிக்கவும் அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் 22 இடங்களில் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களுக்கு குத்தகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 22.71 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதோடு, எதிர்காலத்தில் ராயல்டி மூலம் சுமார் 4,500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், தமிழக அரசு பல்வேறு தொழில்நுட்ப நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது. இதன்படி, சுரங்கப் பணிகளை டிஜிட்டல் மயமாக்க பிரத்யேக இணையதளம் உருவாக்கப்படும். மேலும், குவாரிகளைக் கண்காணிக்க நவீன டிரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். சுரங்க நடவடிக்கைகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்க பிரத்யேக கட்டுப்பாட்டு அறை நிறுவப்படுவதோடு, கனிமங்களை முறையாக பிரித்தெடுக்கவும் முதலீடுகளைச் செய்யவும் தமிழ்நாடு கனிம வளங்கள் மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.









