தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு உயர்வு: சிறைச்சாலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்தது அரசு

தமிழ்நாட்டில் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை இருமடங்காக உயர்த்தியும், சிறைச்சாலைகளில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய பொருளாதார சூழல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதி விதிகளின்படி இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, கொலை அல்லது உயிரிழப்பு நேரிடும் வழக்குகளில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று, கடுமையான காயங்கள் மற்றும் சாதாரண காயங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை முறையே 40,000 ரூபாய் மற்றும் 20,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் இது குறித்த விரிவான அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சிறைச்சாலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் புதிய திட்டங்களை அறிவித்தார். சென்னை புழல் மத்திய சிறையில் நெரிசலைக் குறைக்கும் வகையில், திருவள்ளூரில் 48.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 கைதிகள் தங்கும் வகையில் புதிய மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும், கைதிகளின் மனநலனைப் பேணிக் காக்கும் பொருட்டு, வேலூர் மத்திய சிறையில் 3.63 கோடி ரூபாய் செலவில் 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த மனநல சிகிச்சை மையம் உருவாக்கப்படவுள்ளது.
கைதிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை மத்திய சிறை-1 வளாகத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் (ITI) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறை நிர்வாகத்தைச் சீரமைக்க மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் கூடுதலாக 18 மருத்துவர்கள் மற்றும் 29 செவிலியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இது தவிர, 13 மாவட்ட சிறைகளில் பகுதிநேர உளவியலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். சிறை ஊழியர்களின் நலனுக்காக, அவர்களின் சீருடைப்படி காவல் துறைக்கு இணையான அளவில் உயர்த்தி வழங்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.
தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் சிறைகளில் 400 செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. ஏழு மாவட்ட சிறைகளில் போதை மீட்பு மையங்கள் திறக்கப்படுவதோடு, சிறைச்சாலைகளின் சமையலறைகளை நவீனமயமாக்க 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறைவாசிகள் கேன்டீன்களில் பொருட்களை வாங்குவதற்கான உச்சவரம்பையும் அரசு இருமடங்காக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்தத் துரிதமான நடவடிக்கைகளும், இழப்பீட்டுத் தொகை உயர்வு போன்ற சமூக நலத் திட்டங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரும் ஆறுதலைத் தரும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர்.









