dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தமிழகத்தில் கள் விற்பனைக்கு ஏன் தடை? சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

By Admin
22/09/2026
48 views
தமிழகத்தில் கள் விற்பனைக்கு ஏன் தடை? சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

தமிழகத்தில் கள் இறக்கும் தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கள் இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையைத் தொடர்வதில் அரசு உறுதியாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஜி.திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் கள் விற்பனைக்கான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு முன்பு நடைபெற்றது.

இந்த வழக்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் துணைச் செயலாளர் பி.குமாரி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், கள் இறக்கும் தொழில் தொடர்பான அரசின் நிலைப்பாடு விளக்கப்பட்டுள்ளது. கள் இறக்கப்படும் ஒவ்வொரு பனை மரமும் ஒரு உற்பத்தி அலகாகவே கருதப்படுகிறது. ஒரு மரத்தில் கள் இறக்கும் நிலையிலிருந்து, அது விற்பனைக்கு வரும் வரை பல்வேறு நிலைகளில் கலப்படம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, ஒவ்வொரு பனை மரத்திலும் நடைபெறும் உற்பத்தியைக் கண்காணிப்பது சாத்தியமற்றது என்பதாலேயே, கடந்த காலங்களில் கள் இறக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அவர்களின் பாரம்பரியத் தொழில் நலிவடைந்து வருவதாகவும் மனுதாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. பனைத் தொழிலாளர்கள் நீரா மற்றும் பதனீர் போன்ற பானங்களை இறக்கி விற்பனை செய்வதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்றும், இவை தமிழ்நாடு பனைப் பொருட்கள் மேம்பாட்டு வாரியம் மற்றும் பனை வெல்லம் தயாரிப்பாளர் சங்கங்கள் மூலம் முறையாகச் சந்தைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்தப் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பனை மரம் தமிழகத்தின் மாநில மரம் என்பதால் அதனைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கடலோரப் பகுதி மறுவாழ்வுத் திட்டங்களின் கீழ் பனை மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. முன்னதாக இது போன்ற மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அரசு, இந்த மனுவையும் தள்ளுபடி செய்யுமாறு கோரியது. இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிபதிகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தமிழக அரசு
#கள் விற்பனை
#உயர்நீதிமன்றம்
#பனைத் தொழில்
#மதுவிலக்கு
#TamilNadu
#ToddyBan
#MadrasHighCourt
#PalmTappers
#Prohibition
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications