தமிழ்நாட்டில் கனிம வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கட்டாயம்: விதிமீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படாத தாது மணல் மற்றும் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இனி அனுமதி கிடையாது என சுரங்கத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கனிம வளங்கள் மற்றும் தாது மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் இதர வாகனங்களில் ஜிபிஎஸ் (GPS) கருவிகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில புவியியல் மற்றும் சுரங்கத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், ஜிபிஎஸ் பொருத்தப்படாத வாகனங்களுக்கு இனி போக்குவரத்து அனுமதி மற்றும் பயணச் சீட்டுகள் வழங்கப்படாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நவம்பர் 1-ம் தேதியிலிருந்து உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
முறையற்ற முறையில் கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும், சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக அனைத்து வாகனங்களிலும் ஏஐஎஸ் 140 (AIS 140) தரத்திலான ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என்பதுடன், அவற்றை சுரங்கத்துறையின் இணையதளப் போர்ட்டலான மினரல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (MIMAS) உடன் இணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடு பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இனி வரும் காலங்களில் உரிய ஜிபிஎஸ் வசதி இல்லாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இதன்படி, அனுமதியின்றி கனிமங்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உடனடியாக பறிமுதல் செய்யப்படும். மேலும், விதிமுறைகளை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுரங்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த திட்டத்தை அமல்படுத்த கடந்த மார்ச் 31-ம் தேதி முதற்கட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வாகன உரிமையாளர்களின் வசதிக்காகவும், தொழில்நுட்ப வசதிகளைச் செய்துகொள்வதற்காகவும் செப்டம்பர் 1, செப்டம்பர் 30 என படிப்படியாக கால அவகாசம் வழங்கப்பட்டு, இறுதியாக அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இனி எவ்வித கால நீட்டிப்பும் இருக்காது என்பதால், கனிம போக்குவரத்து தொடர்பான சட்ட திட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறு லாரி உரிமையாளர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.









