கூடலூரில் புலித் தாக்குதல் எதிரொலி: இருநாள் முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு

கூடலூரில் புலித் தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இருநாள் பொது வேலைநிறுத்தத்திற்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஓ-வேலி பேரூராட்சி, லாரிஸ்டன் பகுதியில் புலித் தாக்குதலுக்கு உள்ளாகி இரண்டு நபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டு விலங்குகளின் தொடர் தாக்குதலால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ள நிலையில், இதனைத் தடுக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினரும், வணிகர் சங்கத்தினரும் ஒன்றிணைந்துள்ளனர். இதன்படி, வருகிற ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கூடலூர் பகுதியில் இருநாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, கூடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி, தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். மக்கள் பாதுகாப்பு கருதி இந்த வேலைநிறுத்தத்தில் வணிகர்கள், ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் என அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. புலித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கே. ரவிகுமார் உயிரிழந்ததை அடுத்து நடைபெற்ற போராட்டத்தின் போதே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இப்போது அந்த கோரிக்கையும் போராட்டத்தின் முக்கிய அங்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கூடலூர் வியாபாரிகள் சங்கம் தனது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது. இதன்படி, மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்படும் என்றும், ஆட்டோ மற்றும் டாக்ஸி வாகனங்கள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலமான மசினகுடியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களும் மூடப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்துள்ளதோடு, தங்களது குழந்தைகளை இரண்டு நாட்களுக்குப் பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர். காட்டு விலங்குகளின் நடமாட்டத்தால் தூக்கமில்லா இரவுகளைக் கழிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.









