கடலூர் மாவட்டத்தில் H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி: 35,647 கோழிகள் பலி - அரசு தீவிர தடுப்பு நடவடிக்கை

கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 35,647 கோழிகள் உயிரிழந்துள்ளன.
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் (H5N1) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பினால் குறிஞ்சிப்பாடி வட்டம், கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள பண்ணையில் வளர்க்கப்பட்ட சுமார் 35,647 கோழிகள் உயிரிழந்துள்ளன. கடந்த அக்டோபர் 30-ம் தேதி தியாகவல்லி ஊராட்சிக்கு உட்பட்ட தமனம்பட்டி கிராமத்தில் உள்ள பண்ணையில் கோழிகள் திடீரென உயிரிழந்தது குறித்த தகவல் முதன்முதலில் வெளியானது. உடனடியாக கால்நடை பராமரிப்புத் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு, மாதிரிகளைச் சேகரித்து நாமக்கல்லில் உள்ள கோழி நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு (PDDL) பரிசோதனைக்கு அனுப்பினர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மத்திய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் நிறுவனத்திற்கு (NIHSAD) போபாலுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் H5N1 கிருமி இருப்பது நவம்பர் 5-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஈரோடு மற்றும் நாமக்கல் ஆய்வகங்கள் மற்றும் சென்னையின் மாதவரத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழக ஆய்வகத்திலும் கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நவம்பர் 13-ம் தேதி இதன் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத் துறை போர்க்கால அடிப்படையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் 2021-ம் ஆண்டு வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கப்பட்ட பண்ணை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கோழிகளை அழிக்கும் பணிகள் (Culling) தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட பண்ணைகளில் உள்ள உயிருடன் இருக்கும் பறவைகளுக்கு VIRKON-S மருந்து வழங்கப்பட்டுள்ளதுடன், பண்ணைகள் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோய் பரவுவதைத் தடுக்க, பாதிக்கப்பட்ட பண்ணைகளுக்கு வந்து செல்லும் போக்குவரத்திற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இது குறித்துக் கூறுகையில், நோய் பரவலைத் தடுக்க ஒன்பது விரைவு அதிரடிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பண்ணை உரிமையாளர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்குப் புதிய கோழிகளை வளர்க்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை மற்றும் உள்ளூர் ஊராட்சி அதிகாரிகள் மூலம் இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும். பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், பறவைகளின் உயிரிழப்புகள் குறித்த ஏதேனும் அசாதாரண சூழல் தென்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.









