ஹனுமான் அன்ஷ் திரைப்படம் பிரச்சார நோக்கம் கொண்டதல்ல: நடிகர் சந்தன் கே ஆனந்த் விளக்கம்

நீம் கரோலி பாபாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'ஹனுமான் அன்ஷ்' திரைப்படம் ஆன்மீகம் மற்றும் நேர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி என நடிகர் சந்தன் கே ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நீம் கரோலி பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'ஹனுமான் அன்ஷ்' திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறிய முதலீட்டில் உருவான போதிலும், பெரிய விளம்பரங்கள் இன்றி இப்படம் வெற்றிப் பெற்றிருப்பது திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் சூத்ரதார் ராம்நந்தன் போஸ்லே என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சந்தன் கே ஆனந்த், தனது திரைப் பயண அனுபவங்களையும், இப்படம் ஏன் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையானது என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார். ஒரு நாத்திகர் நம்பிக்கையாளராக மாறும் பயணத்தை வெளிப்படுத்தும் இக்கதாபாத்திரம், தனது சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
படம் உருவான விதம் குறித்துப் பேசிய சந்தன், ஆரம்பத்தில் இப்படத்தின் இயக்குநர் விஷால் சதுர்வேதியால் வேறொரு கதாபாத்திரத்திற்காகவே அழைக்கப்பட்டதாகவும், ஆனால் சித்ரகூடத்தில் நடந்த படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக தனக்கு இந்த முக்கியக் கதாபாத்திரம் கிடைத்ததாகவும் தெரிவித்தார். ஹனுமான் குறித்த கதையைத் தான் நீண்ட நாட்களாக எழுத விரும்பியதாகவும், அந்த விருப்பம் இப்படத்தின் மூலம் நிறைவேறியது தற்செயலான நிகழ்வு அல்ல, அது இறைவனின் ஆசி என்று அவர் நம்புகிறார். திரைப்படத்தில் பக்தி உணர்வுடன், அன்பு, அதிசயம், நகைச்சுவை மற்றும் வீரம் ஆகிய உணர்ச்சிகள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் கோபமோ அல்லது வெறுப்போ இல்லை என்பதுதான் இந்த வெற்றியின் ரகசியம் என்றும் அவர் விளக்குகிறார்.
இன்றைய தலைமுறை இளைஞர்கள் நமது கலாச்சாரம் மற்றும் இதிகாசங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தும் சந்தன், இது போன்ற நேர்மறையான திரைப்படங்கள் காலத்தின் கட்டாயம் என்கிறார். இப்படம் ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக மட்டும் பேசும் பிரச்சாரப்படம் (propaganda) என்ற விமர்சனத்தை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அனைத்து மதங்களும் அமைதியையே போதிக்கின்றன, மகாபாரதம் மற்றும் பிற ஆன்மீகக் கதைகள் ஒவ்வொரு இந்தியரும் அறிந்திருக்க வேண்டிய பொதுவான கலாச்சாரப் பாடங்கள் என்றும் அவர் கூறுகிறார். நீம் கரோலி பாபாவின் கொள்கைகள் அனைவரையும் ஒன்றிணைப்பவை என்றும், அதில் பாகுபாடுகளுக்கு இடமில்லை என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
திரையுலகில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே பாராட்டும் மனப்பான்மை இருப்பதைச் சுட்டிக்காட்டிய சந்தன், இப்படத்தின் வெற்றி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்கிறார். ஒரு நடிகராகத் தான் எப்போதும் நேர்மறையான சிந்தனையுடன் செயல்படுவதாகவும், கீதையில் சொல்லப்பட்டுள்ள 'யதா திருஷ்டி ததா ஸ்ருஷ்டி' (உன் பார்வை எப்படி இருக்கிறதோ, அதுவே உன் படைப்பாகும்) என்ற வரிகளே தனது வாழ்க்கையின் தாரக மந்திரம் என்றும் கூறினார். கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் எத்தகைய சவாலையும் கடந்து வர முடியும் என்பதை 'ஹனுமான் அன்ஷ்' திரைப்படம் நிரூபித்துக் காட்டியுள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.









