நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னானி நடிப்பில் உருவாகியுள்ள 'நூறு கோடி வானவில்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இயக்குநர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'நூறு கோடி வானவில்' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி ஜீ5 (ZEE5) தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. நீண்ட நாட்களாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிச்சைக்காரன் மற்றும் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் சசி, இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண் மற்றும் சசி கூட்டணி சேரும் செய்தி முதன்முதலில் 2019-ஆம் ஆண்டு வெளியானது. பின்னர் 2022-ஆம் ஆண்டு இப்படத்தின் தலைப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது அனைத்து தடைகளையும் தாண்டி நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.
மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா மற்றும் அருண் அருணாச்சலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண் அருணாச்சலம் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கோயம்புத்தூர் சரளா, தம்பி ராமையா, மற்றும் சின்னி ஜெயந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாக வலுவான கூட்டணியைக் கொண்டுள்ள இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசை அமைப்பாளர் சித்து குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை மோகன் ராஜன் மற்றும் விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆகியோர் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக பிரசன்னா எஸ். குமார், படத்தொகுப்பாளராக எம். சுபரக் மற்றும் கலை இயக்குநராக ஈ. தியாகராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஹரிஷ் கல்யாண் தற்போது 'தசமகான்' படத்திலும், சித்தி இத்னானி 'ட்ரோன்ஸ்' படத்திலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்களின் நடிப்பில் 'நூறு கோடி வானவில்' வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.









