dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

வெறுப்புப் பேச்சு வழக்கு: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான பிடியாணை ரத்து - சென்னை நீதிமன்றம் உத்தரவு

By Admin
08/08/2026
104 views
வெறுப்புப் பேச்சு வழக்கு: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான பிடியாணை ரத்து - சென்னை நீதிமன்றம் உத்தரவு

வெறுப்புப் பேச்சு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிணையில் வரமுடியாத பிடியாணையை சென்னை நீதிமன்றம் ரத்து செய்தது.

சென்னை ஜார்ஜ் டவுன் மூன்றாவது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில், திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி மீது தொடரப்பட்ட அவதூறு மற்றும் வெறுப்புப் பேச்சு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்த வழக்கில் ஆஜராகாத காரணத்தினால், பொன்முடிக்கு எதிராக பிணையில் வரமுடியாத பிடியாணையை (Non-bailable warrant) நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இந்த பிடியாணையை ரத்து செய்யக் கோரி, பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்டு, பிடியாணையை ரத்து செய்து நீதிபதி சி. சுந்தரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, பொன்முடி உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இருப்பினும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த காரணங்கள் மற்றும் அவர் பாதிக்கப்பட்டிருந்த உடல்நலப் பாதிப்பு குறித்த போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, அவர் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிணையில் வரமுடியாத பிடியாணையை நீதிமன்றம் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை பொன்முடி நேரில் ஆஜராகி, பிடியாணையை ரத்து செய்யுமாறு முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக, பாஜக கவுன்சிலர் உமா மனோகரன் என்பவர் நீதிமன்றத்தில் தனிப்பட்ட புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முன்னாள் அமைச்சர் பொன்முடி சைவர்கள், வைணவர்கள் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகவும், வெறுப்பைத் தூண்டும் வகையிலும் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை, சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சு பல தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டதையடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தன்மீது தொடரப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்முடி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது பேச்சு நாத்திக கொள்கை உடையவர்களுக்கும், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே பகைமையையும், வெறுப்பையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தது. தற்போது, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#பொன்முடி
#சென்னைநீதிமன்றம்
#திமுக
#வெறுப்புப்பேச்சு
#தமிழகசெய்திகள்
#Ponmudi
#ChennaiCourt
#DMK
#HateSpeechCase
#TamilNaduNews
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications