பிறப்பால் இந்தியக் குடியுரிமை பெற்ற சிறுவனுக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவு: உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

தந்தையின் குடியுரிமை மாறியதற்காக குழந்தையின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி, இந்தியாவில் பிறந்த ஒரு குழந்தையின் தந்தையின் குடியுரிமை மாற்றத்திற்காக அந்தச் சிறுவனின் குடியுரிமையைப் பறிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில், சேலத்தில் ஜனவரி 23, 2016 அன்று பிறந்த 10 வயது சிறுவன் ஒருவன் தனது பாஸ்போர்ட் புதுப்பித்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அந்தச் சிறுவன் இந்தியக் குடியுரிமை பெற்ற பெற்றோர்களுக்குப் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறுவனுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட், அக்டோபர் 4-ஆம் தேதியுடன் காலாவதியானது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, சிறுவனின் தந்தை கடந்த 2021-ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் (UK) குடியுரிமையைப் பெற்றுவிட்டதால், குடியுரிமைச் சட்டம் 1955-ன் பிரிவு 8(2)-ன் படி சிறுவனின் இந்தியக் குடியுரிமையும் முடிவுக்கு வந்துவிட்டதாக பாஸ்போர்ட் அதிகாரி தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, சட்டரீதியான ஆதாரங்கள் இன்றி ஒரு சிறுவனின் குடியுரிமையை பறிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 3(1)-ன் படி, அந்தச் சிறுவன் பிறந்த சமயத்தில் அவனது பெற்றோர் இருவரும் இந்தியக் குடிமக்களாக இருந்ததால், அவன் பிறப்பாலேயே இந்தியக் குடிமகன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தந்தை வெளிநாட்டு குடியுரிமை பெற்றதற்காக சட்டப்பூர்வமான ஆவணங்கள் இன்றி சிறுவனின் உரிமைகளைப் பாதிக்க முடியாது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
வழக்கறிஞரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பாஸ்போர்ட் தொடர்பான கோரிக்கையைப் பரிசீலித்து, உரிய பாஸ்போர்ட் புதுப்பித்தலை அடுத்த மூன்று மாதங்களுக்குள் விரைந்து முடித்துத் தருமாறு பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. பிறப்பால் கிடைத்த குடியுரிமை உரிமையை நிலைநாட்டிய இந்தத் தீர்ப்பு, இதேபோன்ற சூழலில் உள்ள பலருக்கு முக்கிய முன்னுதாரணமாக அமையும் என்று சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.









