தமிழகத்தில் 2,500 கோடி முதலீடு செய்யும் ஹிந்துஜா குழுமம்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின் வாகன துறையில் முக்கிய ஒப்பந்தம்

தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின் வாகன தயாரிப்பு துறைகளில் ஹிந்துஜா குழுமம் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ஹிந்துஜா குழுமம் மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகன போக்குவரத்து மற்றும் நிதிச் சேவைகள் போன்ற முக்கியத் துறைகளில் சுமார் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழக முதலீட்டு மாநாடு 2026-ன் போது கையெழுத்தானது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் ஹிந்துஜா குழுமத்தின் இந்திய நிறுவனத் தலைவர் அசோக் ஹிந்துஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த புதிய முதலீட்டு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 500 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிந்துஜா ரினியூவபிள்ஸ் எனர்ஜி நிறுவனம் இந்த முதலீட்டின் பெரும் பகுதியைச் செலவிட்டு, சூரிய சக்தி, காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு போன்ற துறைகளில் 200 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தித் திறனை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நிலம் மற்றும் மின் இணைப்புகளைப் பெறுவதற்கான பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் தெற்குப் பகுதியில் உள்ள காற்றாலை மற்றும் சூரிய ஒளி வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள இந்த மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மின்சார வாகனப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, குழுமத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபிலிட்டி (OHM Global Mobility) தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டிற்காக மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், மின் வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் கட்டமைப்பு, டிஜிட்டல் மொபிலிட்டி சேவைகள் மற்றும் வாகன உற்பத்தித் துறைகளிலும் கூடுதல் வாய்ப்புகளை ஆராய ஹிந்துஜா குழுமம் ஆர்வம் காட்டியுள்ளது. தமிழகத்தின் வலுவான தொழில்துறை சூழலும், திறமையான மனிதவளமும் தங்களின் வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக அமையும் என்று அசோக் ஹிந்துஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த புதிய முதலீடு, கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிந்துஜா குழுமம் அறிவித்த 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. ஏற்கனவே, சென்னையில் உள்ள பிள்ளைப்பாக்கத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் 500 கோடி ரூபாய் முதலீட்டில் பேட்டரி தயாரிப்பு ஆலையை அமைத்து வருகிறது. தமிழகத்தில் நீண்டகாலமாக இயங்கி வரும் ஹிந்துஜா குழுமம், அசோக் லேலண்ட், கல்ஃப் ஆயில் இந்தியா, ஹிந்துஜா லேலண்ட் பைனான்ஸ் மற்றும் சுவிட்ச் மொபிலிட்டி போன்ற பல நிறுவனங்களின் மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.









