ஹிஸ்ப் உத் தஹ்ரிர் பயங்கரவாத வழக்கு: பிரிட்டன் குடிமகனுக்கு ஜாமீன் மறுப்பு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஹிஸ்ப் உத் தஹ்ரிர் அமைப்பு தொடர்பான வழக்கில், ஐக்கிய ராஜ்ய குடிமகன் அஜீஸ் அகமதுவின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு எதிராக ஹிஸ்ப் உத் தஹ்ரிர் (Hizb ut-Tahrir) என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் சித்தாந்தங்களைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐக்கிய ராஜ்யத்தைச் சேர்ந்த அஜீஸ் அகமது என்பவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு விசாரித்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. முன்னதாக பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (NIA) சிறப்பு நீதிமன்றம் இவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து அஜீஸ் அகமது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட அஜீஸ் அகமது, இந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவில் 'கிலாபா' ஆட்சியை நிறுவும் நோக்கத்தில், மாணவர்கள் உட்பட பலரைத் தீவிரவாதப் பாதையில் ஈடுபடத் தூண்டியதாகவும், அதற்காக நிதி திரட்டியதாகவும் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேல்முறையீட்டு விசாரணையின் போது, ஹிஸ்ப் உத் தஹ்ரிர் அமைப்பு அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்படுவதற்கு முன்னதாக அந்த நபர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தீவிரவாதச் செயல்களில் சேராது என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருப்பினும், இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 17 மற்றும் 18-வது பிரிவுகளின் கீழ் வருவதாகவும், பயங்கரவாதச் செயல்களுக்காக நிதி திரட்டுதல் மற்றும் சதி செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் இதில் அடங்கியுள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மனுதாரர் ஈடுபட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் படைகளைத் திரட்ட அழைப்பு விடுப்பதாகும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர். இவ்வழக்கில் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ள துணை குற்றப்பத்திரிகையில் அஜீஸ் அகமதுவின் செயல்பாடுகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இத்தகைய கடுமையான வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.









