சொகுசு கார், பிளாட் இருந்தாலும் மனைவிக்கு பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்ற குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள சமீபத்திய தீர்ப்பு ஒன்றில், சொகுசு கார்கள் மற்றும் கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு வைத்திருந்தாலும், முறையான வருமானம் இல்லாத மனைவிக்கு கணவர் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணியில், மாடல் அழகி ஒருவர் தனது பிரிந்து வாழும் கணவரிடமிருந்து மாதாந்திர பராமரிப்புத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். அவருக்கு இத்தொகையை வழங்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அந்தப் பெண் வசதியானவர் என்று கூறி கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார். கணவர் திரைப்படத் தயாரிப்பாளராகப் பணிபுரிந்து மாதம் சுமார் பத்து லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், மனைவியின் நிதி நிலையை விட கணவரின் வருமானமே முக்கியமாகக் கருதப்படுகிறது. குழந்தையின் பராமரிப்புக்காக மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கவும் கணவர் சம்மதித்திருந்த நிலையில், மனைவியின் பராமரிப்புத் தொகை தொடர்பாகவே இந்த மோதல் எழுந்தது.
நீதிமன்ற விசாரணையின் போது, மனைவி 1.70 கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட் மற்றும் இரண்டு சொகுசு கார்களை வைத்திருப்பதை சுட்டிக்காட்டி, அவருக்கு பராமரிப்புத் தொகை வழங்கத் தேவையில்லை என கணவர் தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், குழந்தை பிறந்த பிறகு அந்தப் பெண் முறையான வருமானம் ஏதுமின்றி இருப்பதற்கான ஆதாரங்களை நீதிபதி சுட்டிக்காட்டினார். ஒரு பெண் வசதி படைத்தவர் என்பதற்காகவே அவர் பராமரிப்புத் தொகை பெற உரிமை இல்லை என்று கூறிவிட முடியாது என நீதிபதி சுந்தர் மோகன் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், சிஆர்பிசி பிரிவு 125-ன் கீழ் பராமரிப்புத் தொகை கோரும் வழக்குகளில் திருமணத்திற்கான கடுமையான ஆதாரங்கள் மட்டுமே முக்கியமல்ல, மாறாக இருவருக்கும் இடையே நீண்டகால உறவு இருந்ததை உறுதி செய்தாலே போதுமானது எனக் குறிப்பிட்டார். கணவர் அந்தப் பெண்ணை முறையாகத் தனது மனைவியாகவே நடத்தி வந்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிவதால், பராமரிப்புத் தொகையை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, மாதாந்திர பராமரிப்புத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.









