ஐஐடி மெட்ராஸ் நடத்தும் 100 மணிநேர கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

ஐஐடி மெட்ராஸ் நிறுவனம் சுயம் பிளஸ் அமைப்போடு இணைந்து 100 மணிநேர சிறப்பு கிளவுட் கம்ப்யூட்டிங் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
சென்னை ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் (IIT Madras Pravartak Technologies Foundation), மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியான சுயம் பிளஸ் (SWAYAM Plus) அமைப்புடன் இணைந்து புதிய கிளவுட் கம்ப்யூட்டிங் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெறத் தேவையான திறன்களை மாணவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கும் வழங்கும் நோக்கில் இந்த 100 மணிநேர மல்டி-கிளவுட் பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியானது அமேசான் வெப் சர்வீசஸ் (AWS), மைக்ரோசாப்ட் அசுர் (Microsoft Azure) மற்றும் கூகுள் கிளவுட் பிளாட்பார்ம் (GCP) ஆகிய உலகின் முன்னணி கிளவுட் தளங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இதில் கிளவுட் பாதுகாப்பு குறித்த முக்கியமான பாடத்திட்டங்களும் அடங்கும். குறிப்பாக அச்சுறுத்தல் கண்டறிதல், தரவு குறியாக்கம், இணக்கத்தன்மை, பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் சம்பவங்கள் குறித்த பதிலளிப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாகக் கற்பிக்கப்படும். இந்தத் திட்டம் பங்கேற்பாளர்களுக்கு மல்டி-கிளவுட் கட்டமைப்பு மற்றும் அதன் நடைமுறைப் பயன்பாடுகள் குறித்த ஆழ்ந்த அறிவை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்புகள் அனைத்தும் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்களால் நேரலை ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்தப்படும். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை ஐஐடி வளாகத்தில் பங்கேற்பாளர்களுக்கு இரண்டு நாட்கள் நேரிடையாகப் பங்கேற்கும் (Campus Immersion) வசதியும் வழங்கப்படுகிறது. கல்வி வளாகத்தில் நேரிடையான பயிற்சி உள்ளடங்கியுள்ளதால், ஒரு வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விருப்பமுள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிப்பது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.
இந்த சிறப்புப் பயிற்சியின் முதல் தொகுப்பு வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் சேர விரும்பும் ஆர்வலர்கள் செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களில் சிறந்த 5 சதவீத மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் மூலம் வேலைவாய்ப்புக்கான உதவிகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் சைபர் பாதுகாப்புத் துறையில் தங்கள் திறனை மேம்படுத்த விரும்பும் தொழில்முறை வல்லுநர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.









