மனித மூளையின் ரகசியங்களை அறிய 100-க்கும் மேற்பட்ட 3D வரைபடங்கள்: சென்னை ஐஐடியின் புதிய மைல்கல்

சென்னை ஐஐடி சார்பில் 100-க்கும் மேற்பட்ட மனித மூளைகளின் முப்பரிமாண (3D) வரைபடங்களை உருவாக்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையம் (SGBC), மருத்துவத்துறையில் ஒரு புரட்சிகரமான முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன்படி, 100-க்கும் மேற்பட்ட மனித மூளைகளின் முப்பரிமாண (3D) வரைபடங்களை செல் அளவில் (cellular resolution) உருவாக்கும் பிரம்மாண்டமான திட்டத்தை இந்த மையம் முன்னெடுத்துள்ளது. கருவில் இருக்கும் நிலை முதல் முதுமை காலம் வரையிலும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மூளைகளையும் உள்ளடக்கி இந்த வரைபடங்கள் உருவாக்கப்பட உள்ளன.
இந்த புதிய திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை ஐஐடி-க்கு மேற்கொண்ட தனது பயணத்தின் போது நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்வின் போது, உலகிலேயே முதன்முறையாக மனித மூளையில் ஏற்படும் இஸ்கிமிக் ஸ்ட்ரோக் (ischaemic stroke) பாதிப்பை விளக்கும் 'சி-ஸ்ட்ரோக்' (C-STROKE) எனும் 3D அட்லஸையும் அவர் வெளியிட்டார். இந்த அதிநவீன தொழில்நுட்பம், உயிரிழப்புக்கு முந்தைய எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் முடிவுகளையும், உயிரிழப்புக்குப் பிந்தைய மூளை திசுக்களின் நுண்ணிய ஆய்வு முடிவுகளையும் இணைத்து செயல்படக்கூடியது.
இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் நோக்கம், மனித மூளையின் கட்டமைப்பை ஆழமாகப் புரிந்துகொள்வதும், பல்வேறு நோய்களால் மூளையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதும் ஆகும். இதற்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளம், உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் தடையின்றி ஆய்வு செய்வதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட இமேஜிங் தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன கணினி உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தி, முழுமையான மனித மூளைகளை டிஜிட்டல் 3D வரைபடங்களாக மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த மாபெரும் அறிவியல் முயற்சியில் சென்னை ஐஐடியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்தியாவின் 10-க்கும் மேற்பட்ட முக்கிய மருத்துவ நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அளவில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சிப் பணியில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்தத் திட்டம் மனித மூளையைப் பற்றிய புரிதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதோடு, எதிர்கால நரம்பியல் மருத்துவ சிகிச்சைகளுக்கு புதிய பாதையை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.









