பெருமழை மற்றும் வெள்ளக் கணிப்பில் புதிய மைல்கல்: ஐஐடி மெட்ராஸ் ஆய்வில் முக்கியத் தகவல்

வளிமண்டல ஏரோசோல்களைக் கணக்கில் கொள்வதன் மூலம் பெருமழை மற்றும் வெள்ளக் கணிப்புகளை 22 முதல் 50 சதவீதம் வரை மேம்படுத்த முடியும் என ஐஐடி மெட்ராஸ் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி தலைமையிலான சர்வதேச ஆய்வுக்குழு, வளிமண்டலத்தில் காணப்படும் மிகச்சிறிய துகள்களான ஏரோசோல்களை (Aerosols) கருத்தில் கொள்வதன் மூலம் தீவிரமழை மற்றும் அதனால் ஏற்படும் நகர்ப்புற வெள்ளச் சூழல்களை துல்லியமாகக் கணிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் 'நேச்சுரல் ஹசார்ட்ஸ் அண்ட் எர்த் சிஸ்டம் சயின்சஸ்' (Natural Hazards and Earth System Sciences) என்ற புகழ்பெற்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது. மேகங்களின் உருவாக்கம் மற்றும் மழையின் தீவிரத்தன்மையை நிர்ணயிப்பதில் இந்த ஏரோசோல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மிகத்தீவிர மழையையும், அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தையும் ஆராய்ச்சியாளர்கள் மாதிரியாகக் கொண்டு ஆய்வு செய்தனர். சென்னை ஐஐடி, ஜெர்மனியின் ஜிஎஃப்இசட் ஹெல்ம்ஹோல்ட்ஸ் சென்டர் பார் ஜியோசயின்சஸ், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) மற்றும் காத்மாண்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த வல்லுநர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதற்காக வானிலை ஆய்வு மற்றும் கணிப்பு (WRF) மாதிரியைப் பயன்படுத்தி, பல்வேறு ஏரோசோல் நிலைகளில் வளிமண்டல செயல்பாடுகள் எவ்வாறு அமைகின்றன என்பது ஆராயப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள் மேகங்களின் நீர்த்துளிகள் உருவாகத் தேவையான மையமான 'கிளவுட் கன்டென்சேஷன் நியூக்ளியை' (CCN) மாதிரிகளில் இணைத்து, அவை மழையின் அளவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விரிவாக ஆய்வு செய்தனர். அதன்பின், பெறப்பட்ட மழைப்பொழிவு தரவுகளை ஆடையாறு வடிநிலப் பகுதியில் வெள்ளப் பாதிப்புகளைக் கணிக்க உதவும் HEC-HMS மற்றும் HEC-RAS ஆகிய நீரியல் மாதிரிகளுடன் இணைத்தனர். இந்த மேம்படுத்தப்பட்ட முறையைப் பயன்படுத்தியதில், பாரம்பரிய முறையை விட சுமார் 22 சதவீதம் அதிக துல்லியமான மழைப்பொழிவு கணிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வெள்ளப் பாதிப்பு கணிப்பில் சுமார் 50 சதவீத துல்லியம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை ஐஐடியின் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த சந்தன் சாரங்கி, வானிலை மாதிரிகளில் மழைப்பொழிவின் இடஞ்சார்ந்த மற்றும் காலஞ்சார்ந்த பரவல் பல நேரங்களில் சரியாகக் கணிக்கப்படுவதில்லை என்றார். ஏரோசோல்-மேகம் இடையிலான தொடர்புகளைக் கணக்கில் கொள்வது, நகர்ப்புறங்களில் தீவிர மழைப்பொழிவை முன்கூட்டியே சரியாக அறியவும், வெள்ள எச்சரிக்கைகளை மேம்படுத்தவும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார். இதே துறையின் பேராசிரியர் எஸ்.என்.குயிரி கூறுகையில், துல்லியமான மழை முன்னறிவிப்புகள் மூலம் அணைகளின் நீர் இருப்பு மற்றும் வெள்ளக் காலங்களில் நீர் வெளியேற்றம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க அரசுக்கு இது பெரிதும் உதவும் என்றார்.
இருப்பினும், இந்த ஆய்வுமுறை தற்போது முழுமையான செயல்பாட்டு வெள்ள முன்னறிவிப்பு அமைப்பாக இன்னும் மாறவில்லை என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த அணுகுமுறையை உறுதிப்படுத்தவும், மேலும் துல்லியமாக்கவும் பிற தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகள் மற்றும் வெவ்வேறு நகரங்களில் விரிவான ஆராய்ச்சிகள் தேவை என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எதிர்காலத்தில் ஏரோசோல்கள் மற்றும் நகர்ப்புற உமிழ்வுகள் குறித்த உயர்தர தரவுகள் கிடைப்பது, இத்தகைய முன்னறிவிப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









