dhina anjal logo
முகப்பு/சினிமா

99-வது ஆஸ்கர் விருது: இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக மராத்திய திரைப்படம் 'கோந்தல்' அறிவிப்பு

By Admin
18/09/2026
55 views
99-வது ஆஸ்கர் விருது: இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக மராத்திய திரைப்படம் 'கோந்தல்' அறிவிப்பு

சந்தோஷ் தாவ்கர் இயக்கத்தில் உருவான 'கோந்தல்' திரைப்படம் 99-வது ஆஸ்கர் விருதுக்கான இந்திய அதிகாரப்பூர்வ தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட உலகில் மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது விழா, வரும் 2027-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான 99-வது அகாடமி விருதுகளுக்கு, இந்தியாவின் சார்பாக எந்தப் படம் போட்டியிடும் என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், மராத்திய திரைப்படமான கோந்தல் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட கூட்டமைப்பு இந்தியா (Film Federation of India) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இயக்குநர் சந்தோஷ் தாவ்கர் எழுதி இயக்கியுள்ள இப்படம், மகாராஷ்டிராவின் கிராமப்புற பின்னணியைக் கொண்டது. ஒரு புதுமணத் தம்பதியினரை மையமாகக் கொண்டு, அவர்கள் பங்கேற்கும் பாரம்பரிய சடங்கு ஒன்றின் போது ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பான திரில்லர் பாணியில் இப்படம் விவரிக்கிறது. இந்தத் தேர்வுக்காக மொத்தம் 33 திரைப்படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. திரைப்பட தயாரிப்பாளர் பி. சேஷாத்ரி தலைமையிலான தேர்வுக் குழுவினர் இறுதியாக கோந்தல் படத்தை ஆஸ்கர் போட்டிக்கு பரிந்துரைத்தனர்.

மராத்திய மொழியில் உருவான ஒரு திரைப்படம் ஆஸ்கர் போட்டிக்குத் தேர்வாகியிருப்பது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னதாக 2005-ல் 'சுவாஸ்', 2009-ல் 'ஹரிச்சந்திராச்சி பேக்டரி' மற்றும் 2015-ல் 'கோர்ட்' ஆகிய மராத்திய படங்கள் இந்திய சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு நீரஜ் கேவான் இயக்கத்தில் உருவான 'ஹோம் பவுண்ட்' திரைப்படம் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்தவொரு இந்தியத் திரைப்படமும் சர்வதேசத் திரைப்படப் பிரிவில் ஆஸ்கர் விருதினை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் 'மதர் இந்தியா', 'சலாம் பாம்பே' மற்றும் 'லகான்' ஆகிய மூன்று இந்தியத் திரைப்படங்கள் மட்டுமே இறுதி பரிந்துரைப் பட்டியலில் (Nomination) இடம்பிடித்தன. தீபா மேத்தா இயக்கத்தில் ஜான் ஆபிரகாம் மற்றும் லிசா ரே நடிப்பில் வெளியான 'வாட்டர்' திரைப்படம் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், அது கனடா நாட்டின் சார்பில் போட்டியிட்டது என்பது கவனிக்கத்தக்கது. தற்போது உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கோந்தல் திரைப்படம், ஆஸ்கர் மேடையில் இந்தியத் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் என்று திரை ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#திரைப்படம்
#ஆஸ்கர்2027
#மராத்தியசினிமா
#இந்தியதிரைப்படம்
#கோந்தல்
#Oscars2027
#MarathiFilm
#IndianCinema
#Gondhal
#AcademyAwards
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications