இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணி: கேப்டனாக லக்ஷயா ராய்ச்சந்தானி நியமனம் - அணியில் இணையும் சேவாக், டிராவிட் வாரிசுகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் தொடருக்கான கேப்டனாக உத்தரகாண்டின் லக்ஷயா ராய்ச்சந்தானி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் தொடருக்கான கேப்டனாக உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர் லக்ஷயா ராய்ச்சந்தானி நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு எதிரான வரவிருக்கும் சர்வதேச தொடருக்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியை லக்ஷயா ராய்ச்சந்தானி வழிநடத்த உள்ளார். இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான வீரேந்திர சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் மகன்களான ஆர்யவீர் சேவாக் மற்றும் அன்வய் டிராவிட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அன்வய் டிராவிட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் தேர்வாகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடர் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகளைக் கொண்டது. மூன்று ஒருநாள் போட்டிகளும் ராஜ்கோட்டில் செப்டம்பர் 18, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கிடையில், நான்கு நாள் தொடருக்கான இந்திய அணிக்கு லக்ஷயா ராய்ச்சந்தானி துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் நான்கு நாள் போட்டி செப்டம்பர் 27 முதல் 30 வரையிலும், இரண்டாவது போட்டி அக்டோபர் 5 முதல் 8 வரையிலும் அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது.
தனது நியமனம் குறித்துப் பேசிய லக்ஷயா ராய்ச்சந்தானி, இந்தத் தலைமைப் பொறுப்பு தனக்கு ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருப்பதாகத் தெரிவித்தார். தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவே தான் எப்போதும் விரும்புவதாகவும், தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்குத் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்திய 19 வயதுக்குட்பட்டோர் ஒருநாள் அணியின் வீரர்கள் பட்டியல்: லக்ஷயா ராய்ச்சந்தானி (கேப்டன்), யாஷ்பர்தன் சவுகான் (துணை கேப்டன்), ரஜத் பாகேல் (விக்கெட் கீப்பர்), ஆர்யவீர் சேவாக், வி.கே. வினீத், குஷாக்ரா ஓஜா, அர்ஜுன் ராஜ்புத், மனல் சவுகான், அன்வய் டிராவிட் (விக்கெட் கீப்பர்), வி. யாஷ்வீர், ரோஹித் யாதவ், ஷவின் வினோத், மோகித் உல்வா, சிகுருபதி வெங்கட் மற்றும் காவ்யா படேல்.









