போர்ச்சுகல் கிளப்புடன் ஒப்பந்தமான இந்திய இளம் கால்பந்து வீரர் யோஹான் பெஞ்சமின்

மும்பையைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர் யோஹான் பெஞ்சமின் போர்ச்சுகல் நாட்டின் குவார்டா எஃப்சி கிளப்புடன் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த திறமையான இளம் கால்பந்து வீரர் யோஹான் பெஞ்சமின், ஐரோப்பிய கால்பந்து அரங்கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். போர்ச்சுகல் நாட்டின் நான்காம் நிலை கால்பந்து கிளப்பான குவார்டா எஃப்சி (Guarda FC), யோஹானுடன் இரண்டு ஆண்டு கால ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. விசா நடைமுறைகள் மற்றும் சர்வதேச அனுமதி பெற்ற பிறகு, அவர் அதிகாரப்பூர்வமாக அந்த கிளப்பில் இணையவுள்ளார். இந்திய கால்பந்து வீரர்களின் திறமை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படுவதற்கு இது ஒரு முக்கிய உதாரணமாகக் கருதப்படுகிறது.
ஐரோப்பிய கால்பந்தாட்டத்தில் அசத்தும் யோஹான் கடந்த ஆண்டு யோஹான் பெஞ்சமின் நிகழ்த்திய சாதனை இந்திய கால்பந்து வரலாற்றில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. யுஇஎஃப்ஏ (UEFA) யூத் லீக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஸ்லோவேனியாவைச் சேர்ந்த என்.கே. பிராவோ (NK Bravo) அணியின் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாடிய அவர், ஆகஸ்ட் 2025-இல் போர்ச்சுகல் நாட்டின் புகழ்பெற்ற போர்டோ (Porto) அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி கவனம் ஈர்த்தார்.
வளர்ச்சியும் அனுபவமும் யோஹானின் கால்பந்து பயணம் பல்வேறு முன்னணி அகாதமிகளில் தொடங்கியது. மும்பையின் கன்சியன்ட் கால்பந்து பள்ளி, பெங்களூரு கால்பந்து அகாதமி மற்றும் மினர்வா கால்பந்து அகாதமிகளில் தனது அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட அவர், 2022-ஆம் ஆண்டு ஷில்லாங் லாஜோங் கிளப்பில் இணைந்தார். அங்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்ற அவர், கிளப்பின் சீனியர் மற்றும் ரிசர்வ் அணிகளில் விளையாடி குறிப்பிடத்தக்க அனுபவத்தைப் பெற்றார். 2024 ஷில்லாங் பிரீமியர் லீக் போட்டியில் ஒன்பது கோல்களை அடித்து, தனது அணி சாம்பியன் பட்டம் வெல்ல அவர் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அரங்கில் முன்னேற்றம் 2023-24 ஏஐஎஃப்எஃப் (AIFF) யூத் லீக் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி ஒன்பது கோல்களை அடித்ததன் மூலம், இந்திய 19 வயதுக்குட்பட்டோர் தேசிய அணிக்குத் தேர்வானார். அதன் பிறகு 2025 எஸ்ஏஎஃப்எஃப் (SAFF) யூத் சாம்பியன்ஷிப் தொடரிலும் அவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். தற்போது போர்ச்சுகல் நாட்டின் குவார்டா எஃப்சி கிளப்புடன் அவர் இணைந்துள்ளது, இந்திய மற்றும் ஆசிய நாட்டு வீரர்களுக்கு ஐரோப்பிய கால்பந்து கதவுகளைத் திறந்துவிடும் முயற்சியின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.









