dhina anjal logo
முகப்பு/இந்தியாவணிகம்

இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு தொழில்துறைகள் கைகொடுக்க வேண்டும்: முன்னாள் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அழைப்பு

By Admin
23/08/2026
65 views
இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு தொழில்துறைகள் கைகொடுக்க வேண்டும்: முன்னாள் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அழைப்பு

தொழில்முறை வளர்ச்சிக்காக இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்து, கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என முன்னாள் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் வலியுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில், முன்னாள் இஸ்ரோ தலைவரும் ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் தலைவருமான எஸ்.சோம்நாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நவீன கால தொழில் வளர்ச்சிக்கு கல்வி நிறுவனங்களும் தொழில்துறைகளும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்தினார். இளம் ஆராய்ச்சியாளர்களைத் தொழில்துறையினர் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஆராய்ச்சி மாணவர்களின் திறமையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தொழில்துறைகள் முன்முயற்சி எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். உதாரணமாக, முனைவர் பட்டப் படிப்பில் ஈடுபடும் மாணவர்களுக்குத் தொழில்துறை நிறுவனங்கள் கல்வி உதவித்தொகை வழங்கி உதவலாம். இதன் மூலம், சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த மாணவரின் முழு கல்விச் செலவையும் ஏற்பதோடு, படிப்பு முடிந்ததும் அவரைத் தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்திக்கொள்ள முடியும். இது அந்த மாணவருக்கு உண்மையான தொழில்முறைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வாய்ப்பையும், நிறுவனத்திற்குத் திறமையான பணியாளர்களையும் பெற்றுத் தரும். இத்தகைய நடைமுறை மூலம் ஆராய்ச்சியின் தரம் மேம்படுவதோடு, மாணவர்களின் எதிர்காலமும் பாதுகாப்பானதாக அமையும் என்று சோம்நாத் தெரிவித்தார்.

தொழில் நிறுவனங்கள் தங்கள் சமூகப் பொறுப்புணர்வு நிதியினை (CSR) கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்தினார். பல முனைவர் பட்ட மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சித் தலைப்பிற்கும், தாங்கள் செய்யும் வேலைக்கும் சம்பந்தமில்லாத துறைகளில் பணியாற்றுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இது மிகப்பெரிய அறிவு விரயம் என்று கவலை தெரிவித்தார். தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப ஆராய்ச்சிகளை முன்னெடுத்தால் மட்டுமே தொழில்துறை மற்றும் கல்வித்துறை என இரண்டு தரப்புக்கும் பயன் கிடைக்கும் என்பது அவரது கருத்தாகும்.

மேலும், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் பங்களிப்பு குறித்தும் அவர் முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ஐஐடி பேராசிரியர்களைப் போல பிற கல்வி நிறுவன ஆசிரியர்களும் மாணவர்களின் ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய தொழில்முனைவுகளை (Start-ups) ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். விமான போக்குவரத்துத் துறை சார்ந்த பயிற்சிகள் மற்றும் பயிற்சி நிலையங்களின் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவில் விமானி பயிற்சி அளிக்கும் நிலையங்கள் குறைவாக இருப்பதாலும், பயிற்சி விமானங்களுக்குத் தேவையான விமான நிலைய ஒதுக்கீடுகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாலும், பல மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதை மாற்ற, தொழில்முறைக்குத் தயாரான திறமையான பணியாளர்களை உருவாக்கும் வகையில் அதிகப்படியான கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#இஸ்ரோ
#எஸ்.சோம்நாத்
#ஆராய்ச்சி
#கல்வி
#தொழில்துறை
#ISRO
#S.Somnath
#Research
#Education
#Industry
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications