கோவை அருகே காயத்துடன் தவிக்கும் யானைக் கன்று: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

கோவை அருகே உள்ள சோலக்கரை பகுதியில் காயமடைந்த யானைக் கன்று ஒன்றை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், மத்துக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சோலக்கரை மற்றும் நவாக்கரை ஆகிய வனப்பகுதிகளில், காயத்துடன் நடைதடுமாறி நடக்கும் யானைக் கன்று ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி அந்த குட்டி யானையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். காயமடைந்த கன்று அதன் தாயுடன் சாலையோரம் மெதுவாக நடந்து செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் டி.வெங்கடேஷ் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் என்.வெங்கடேஷ் பிரபு ஆகியோரின் உத்தரவின் பேரில், மத்துக்கரை வனச்சரக அலுவலர் ஆர்.அருண்குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கால்நடை மருத்துவக் குழுவினருடன் சென்ற வனத்துறையினர், ட்ரோன் கருவிகளைப் பயன்படுத்தி யானைக் கன்றின் நடமாட்டத்தையும் அதன் உடல்நலத்தையும் தூரத்தில் இருந்தபடி ஆய்வு செய்தனர். விசாரணையின்போது, கன்றின் வலது முன் காலிலும் இடது பின் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டு, அது நொண்டியபடி நடப்பது உறுதி செய்யப்பட்டது.
வனத்துறை அதிகாரிகளின் முதற்கட்ட தகவல்படி, இந்த யானைக் கன்று சிறுத்தை அல்லது புலி போன்ற ஏதேனும் ஒரு வனவிலங்கினால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதன் வாலில் ஏற்பட்டுள்ள காயங்கள் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். தாய் யானையின் பாதுகாப்பினால் பெரிய அளவிலான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும், இருப்பினும் காயத்தின் தீவிரத்தன்மையால் அந்த கன்றினால் இயல்பாக நடக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது காயமடைந்த யானைக் கன்றுடன் அதன் தாய் உட்பட மேலும் மூன்று பெண் யானைகள் இப்பகுதியில் வலம் வருவதால், வனத்துறையினர் நேரடியாக நெருங்கிச் சென்று சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. யானைக் கூட்டம் தொடர்ந்து அப்பகுதியிலேயே இருப்பதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கவும், யானைகளின் நடமாட்டத்தை உறுதி செய்யவும் வனத்துறையினர் பாதுகாப்புக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். யானைக் கன்றின் உடல்நிலையைத் தொடர்ந்து கவனித்து வரும் அதிகாரிகள், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.









