இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் கலப்புத் திருமணங்கள் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

இந்து மற்றும் பிற மதத்தினர் இடையேயான திருமணம், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டால் அது சட்டப்பூர்வமாக செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், பிற மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையேயான திருமணம், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டாலும் அது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதியரசர்கள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் எஸ்.ரவிகுமார் அடங்கிய அமர்வு, இந்த முக்கிய சட்ட முடிவை வெளியிட்டுள்ளது. ஒரு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கணவர், தனது திருமணத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தபோது நீதிமன்றம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
இந்து திருமணச் சட்டத்தின் 5 மற்றும் 8 ஆகிய பிரிவுகளின்படி, இந்து மதத்தைச் சாராத ஒருவருடன் செய்யப்படும் திருமணத்தை இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு இந்துவிற்கும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவருக்கும் இடையேயான திருமணம் நடைபெற வேண்டுமானால், அது இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் அல்லது சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உண்மைகளை மறைத்து இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இத்தகைய திருமணங்கள் சட்டத்தின் பார்வையில் செல்லாதவை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தம்பதியினர், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் எந்தவித நடைமுறைகளையும் பின்பற்றாமல், தவறான தகவல்களைக் கூறி இந்து திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்துள்ளனர். இது போன்ற திருமணப் பதிவு சட்டப்பூர்வமாக நிலைக்காது என்று கூறிய நீதிமன்றம், ஒரு திருமணம் செல்லாது என்று அறிவிப்பதற்கு சுமார் 16 ஆண்டுகள் நீதிமன்றப் போராட்டம் தேவைப்பட்டதைக் கண்டு அதிருப்தி தெரிவித்தது. எதிர்காலத்தில் இது போன்ற தேவையற்ற சட்டப் போராட்டங்களைத் தவிர்க்க, இந்த உத்தரவின் நகலை பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி, அனைத்து திருமணப் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தன்னை ஏமாற்றி திருமணப் பத்திரத்தில் கையொப்பம் பெற்றதாக கணவர் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. மேலும், தாம் ஒரு கிறிஸ்தவர் என்றும், அந்தப் பெண்ணுடன் திருமணத்திற்குப் பிறகு தாம் சேர்ந்து வாழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சென்னை குடும்ப நல நீதிமன்றம் முன்னர் இந்த விவாகரத்து கோரிக்கையை நிராகரித்திருந்த நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, சட்டத்திற்குப் புறம்பான முறையில் பதிவு செய்யப்பட்ட அந்தத் திருமணத்தை செல்லாது என அறிவித்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.









