ஆந்திராவுக்கு சென்ற முதலீடு: தமிழகத்தின் போட்டித்திறன் குறையவில்லை என அரசு விளக்கம்

ரூ.1,614 கோடி முதலீடு ஆந்திராவிற்கு சென்ற விவகாரத்தில், அந்த முதலீடு ஒருபோதும் தமிழகத்திற்கு சொந்தமானது அல்ல என தொழில் துறை விளக்கம் அளித்துள்ளது.
தென் கொரியாவின் முன்னணி வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களான ஹ்வாஷின், சியோன் மற்றும் ஐவாமெட் ஆகிய நிறுவனங்கள் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூரில் ரூ.1,614 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலைகளை அமைக்க முடிவு செய்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் வாகன உதிரிபாகங்கள் தொழில் துறையின் வளர்ச்சி சரிவைச் சந்திப்பதாக வெளியான தகவல்களை தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து தொழில் துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், இந்த முதலீட்டு மாற்றம் என்பது மாநிலத்தின் போட்டித்திறனில் ஏற்பட்ட வீழ்ச்சி அல்ல, மாறாக வாகன உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியின் (Supply Chain) இயல்பான செயல்பாடே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள், தாங்கள் சப்ளை செய்யும் பிரதான வாகன உற்பத்தி ஆலைகளுக்கு (OEMs) அருகிலேயே அமைவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. ஹ்வாஷின் மற்றும் சியோன் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கிருஷ்ணகிரியில் தங்கள் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. அதேபோல், ஐவாமெட் நிறுவனமும் ஸ்ரீபெரும்புதூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தைக் கொண்டுள்ளது. ஆந்திராவில் ஏற்கனவே உள்ள வாகன உற்பத்தி ஆலைகளின் விரிவாக்கத்திற்காகவே இந்த புதிய முதலீடுகள் அங்கு மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்கும் தமிழக அரசின் தொழில் கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வர அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது என்பதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள், இருப்பினும் சில நிறுவனங்களின் பிரதான வாடிக்கையாளர்கள் ஏற்கனவே ஆந்திராவில் இருப்பதால், அந்த இலக்கை அடைய முடியாமல் போனது இயல்பானதுதான் என்று குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக, மோட்டிவ் லிங்க், இன்சி கன்ட்ரோல்ஸ், வூ-யங் மற்றும் டிஒய்சி1 போன்ற நிறுவனங்களை ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு ஈர்த்த வெற்றியை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்கள் ஆந்திராவிற்கு சென்றதை வைத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியை மதிப்பிட முடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் தொடர்ந்து நாட்டின் மிக முக்கியமான வாகன உற்பத்தி மையமாகத் திகழ்கிறது. சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஒசூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வலுவான வாகன உற்பத்தி சுற்றுச்சூழல் கட்டமைக்கப்பட்டுள்ளது. பல உலகளாவிய நிறுவனங்கள் இங்கேயே தொடர்ந்து முதலீடு செய்து விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக அரசு பல்வேறு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக உலகளாவிய மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.









