கிராமப்புறங்களில் அயோடின் குறைபாடு: உப்பில் அயோடின் அளவு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய எச்சரிக்கை

தமிழகத்தில் கிராமப்புற குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் போதிய அயோடின் சத்து இல்லாத உப்பையே பயன்படுத்துவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் சராசரியாக நாளொன்றுக்கு 13 கிராம் உப்பு பயன்படுத்துவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கிராமப்புற குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் போதுமான அளவு அயோடின் சத்து இல்லாத உப்பையே பயன்படுத்தி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலக அயோடின் குறைபாடு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் இதனைத் தெரிவித்தார். அயோடின் சத்துக் குறைபாடு என்பது தனிப்பட்ட ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், சமூகத்தின் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் பாதிக்கக்கூடியது என்பதை அவர் வலியுறுத்தினார்.
அயோடின் குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசிய அமைச்சர், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது அதிக ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்தார். அயோடின் குறைபாடு கருக்கலைப்பு அபாயத்தை அதிகரிப்பதுடன், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் பெரும் தடையாக அமைகிறது. மேலும், அயோடின் பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றான முன் கழுத்துக் கழலை (Goitre) நோய் பாதிப்பு, மதுரை, விழுப்புரம், தஞ்சாவூர், இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமையைச் சரிசெய்ய சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அயோடின் கலந்த உப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அதே வேளையில், அயோடின் இல்லாத உப்பை விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும், கிராமப்புறங்களில் உள்ள செவிலியர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று, சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பில் உள்ள அயோடின் அளவை உடனுக்குடன் பரிசோதனை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நடப்பு ஆண்டில் சுகாதாரத்துறை மேற்கொண்ட தரவு ஆய்வுகளின்படி, இதுவரை 6,576 உப்பு மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 5,784 மாதிரிகள் அதாவது 87.9 சதவீத உப்பில் 15 பிபிஎம் (ppm) அளவிற்கு மேல் அயோடின் இருந்தது கண்டறியப்பட்டது. இருப்பினும், 777 மாதிரிகளில் (11.8%) 15 பிபிஎம்-க்கும் குறைவாகவே அயோடின் இருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக 15 மாதிரிகளில் (0.2%) அயோடின் சத்தே இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனித ஆரோக்கியத்திற்கு உப்பில் அயோடின் அளவு கண்டிப்பாக 15 பிபிஎம்-க்கு மேல் இருக்க வேண்டும் என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.









