தமிழ்நாட்டில் சிறை உடைப்பு அச்சம்: 16 துணைக் கிளைச் சிறைகள் மூடல் - கைதிகள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் சிறை உடைப்பு சம்பவங்களை தொடர்ந்து, நிர்வாக வசதிக்காக மாநிலம் முழுவதும் 16 துணைக் கிளைச் சிறைகள் தற்காலிகமாக மூடப்பட்டு கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக நடைபெற்று வரும் தொடர் சிறை உடைப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, சிறைத்துறை நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 16 துணைக் கிளைச் சிறைகளை தற்காலிகமாக மூடுவதற்கும், அங்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகளை அருகில் உள்ள பெரிய சிறைகளுக்கு மாற்றவும் சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கேற்ப, சிறைகளில் பணியாற்றும் ஊழியர்களும் பிற இடங்களுக்குப் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மண்டலத்தைப் பொறுத்தவரை, தேனி மாவட்டம் உத்தமபாளையம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள துணைக் கிளைச் சிறைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் சிறையில் இருந்த 17 கைதிகள், பெராரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறைக்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. கே. சங்கர் விளக்கமளிக்கும்போது, இந்த நடவடிக்கைகள் நிரந்தர மூடல் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார். நிர்வாக வசதிக்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கையை விட ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை கவனத்தில் கொண்டு, அந்தந்த மாவட்ட சிறை கண்காணிப்பாளர்கள் கைதிகளை அருகிலுள்ள சிறைகளுக்கு மாற்றவும், ஊழியர்களை மறுபணியமர்த்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கைதிகள் சிறைக்கு வெளியே மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெட்ரோல் நிலையங்கள், சிறை பஜார்கள், கோழிப்பண்ணைகள் மற்றும் தோட்டப்பணிகளில் கைதிகள் ஈடுபடுத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளை வெளியே அழைத்துச் சென்று கண்காணிப்பதில் தற்போது கூடுதல் எச்சரிக்கை தேவைப்படுவதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிலைமை சீரான பிறகு, பணிகள் மீண்டும் வழக்கம் போல் தொடங்கும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









