ஜம்மு காஷ்மீர் ஓபன் கோல்ஃப்: ஒன்பது ஷாட்கள் வித்தியாசத்தில் வாகை சூடிய காலின் ஜோஷி

ஜம்மு காஷ்மீர் ஓபன் கோல்ஃப் போட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த காலின் ஜோஷி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ராயல் ஸ்பிரிங்ஸ் கோல்ஃப் மைதானத்தில் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் ஓபன் 2026 கோல்ஃப் போட்டியில், பெங்களூருவைச் சேர்ந்த முன்னணி கோல்ஃப் வீரர் காலின் ஜோஷி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். மொத்தம் ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில், 33 வயதான ஜோஷி ஒன்பது ஷாட்கள் வித்தியாசத்தில் மற்ற வீரர்களைப் பின்தள்ளி தனது எட்டாவது தொழில்முறை கோல்ஃப் பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம், 2026-ஆம் ஆண்டின் டிபி வேர்ல்ட் பிஜிடிஐ பருவத்தில் அவர் பெறும் இரண்டாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் இறுதி சுற்றினை ஆறு ஷாட்கள் முன்னிலையுடன் தொடங்கிய காலின் ஜோஷி, தொடக்கத்தில் சற்று பதற்றமடைந்ததாகக் குறிப்பிட்டார். முதல் ஃபேர்வேயைத் தவறவிட்டது அவருக்குச் சவாலாக அமைந்தாலும், மூன்றாவது துளையிலிருந்து தனது இயல்பான ஆட்டத்திற்குத் திரும்பினார். தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது துளைகளில் அவர் எடுத்த 'பர்டீஸ்' புள்ளிகள், அவருக்குத் தேவையான தன்னம்பிக்கையை அளித்தன. இறுதிச் சுற்றில் மட்டும் 66 ஷாட்களைப் பதிவு செய்த அவர், ஒட்டுமொத்தமாக 24-அண்டர் 260 புள்ளிகளைப் பெற்று வாகை சூடினார். அவருக்கு 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியில் டெல்லியைச் சேர்ந்த ரஷித் கான் 15-அண்டர் 269 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பானிப்பட்டைச் சேர்ந்த ஷுபம் ஜாக்லான் 14-அண்டர் 270 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்று, நடப்பு பருவத்தில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர் முழுவதும் துல்லியமாக விளையாடிய ஜோஷி, மொத்தம் 72 துளைகளில் ஒரே ஒரு முறை மட்டுமே தவறு செய்தார் என்பது அவரது ஆதிக்கத்தை உணர்த்துகிறது. மேலும், கடைசி 55 துளைகளில் அவர் ஒருமுறை கூட 'போகி' (bogey) செய்யாமல் விளையாடியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
தனது வெற்றிக்குப் பிறகு பேசிய காலின் ஜோஷி, ராயல் ஸ்பிரிங்ஸ் கோல்ஃப் மைதானத்தின் இயற்கை அழகைப் புகழ்ந்து தள்ளினார். காஷ்மீருக்கு தான் வருவதது இது நான்காவது முறை என்றும், இங்கிருக்கும் சூழல் கோல்ஃப் விளையாடுவதற்கு மிகவும் உகந்ததாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த வெற்றியின் மூலம் பிஜிடிஐ தரவரிசைப் பட்டியலில் 13-வது இடத்திலிருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ள ஜோஷி, இந்த சீசனில் இதுவரை 34,85,575 ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆந்திர ஓபன் போட்டியிலும் வெற்றி பெற்ற ஜோஷி, தற்போது மீண்டும் ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்து தனது சிறப்பான பார்மைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.









