தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தசைப்பிடிப்பு காயம் காரணமாக 'தி ஹண்ட்ரட்' தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். மும்பையைச் சேர்ந்த 25 வயதான ஜெமிமா, சதர்ன் பிரேவ் அணிக்காக விளையாடி வந்த நிலையில், அவருக்கு தசைப்பிடிப்பு (hamstring injury) ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அந்தத் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த காயம் காரணமாக, வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கவிருக்கும் மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில் ஜெமிமா பங்கேற்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. காயத்தின் தீவிரத்தன்மை மற்றும் குணமடையத் தேவைப்படும் கால அவகாசத்தைப் பொறுத்தே அவரது ஆசிய கோப்பை வாய்ப்பு உறுதி செய்யப்படும். ஆகஸ்ட் 30-ம் தேதி தாய்லாந்து அணிக்கு எதிரான போட்டியுடன் இந்திய அணி தனது ஆசிய கோப்பை பயணத்தைத் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகலைத் தொடர்ந்து, சதர்ன் பிரேவ் அணி அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் சார்லி நாட்டை அணியில் இணைத்துள்ளது. இந்தத் தகவலை சதர்ன் பிரேவ் அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. காயத்திலிருந்து ஜெமிமா விரைவில் குணமடைய தாங்கள் விரும்புவதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தி ஹண்ட்ரட் தொடரில் விளையாடிய காலத்தில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். இதுவரை அவர் 143 ரன்களைக் குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 35.75 என்ற சராசரியையும், 131.19 என்ற ஸ்டிரைக் ரேட்டையும் கொண்டிருந்த அவர், அணியின் முக்கிய பேட்டராகத் திகழ்ந்தார். வரும் மூன்று வாரங்களுக்குள் அவர் முழு உடல் தகுதியுடன் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.









