சர்வதேச தடகளப் போட்டியில் ஜொலித்த ஜோதி யாராஜி: காயத்திலிருந்து மீண்டு வந்த பயணம்

நீண்ட கால காயத்திற்குப் பிறகு சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்ற ஜோதி யாராஜி, 100 மீட்டர் தடை ஓட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
நீண்ட நாள் காயங்கள் மற்றும் உடல்நலப் போராட்டங்களுக்குப் பிறகு, இந்திய தடகள வீராங்கனை ஜோதி யாராஜி மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார். கடந்த 383 நாட்களாக முழங்கால் தசைநார் பாதிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய காயங்களால் அவதிப்பட்டு வந்த அவர், தற்போது மீண்டும் களமிறங்கி தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான ஜோதி யாராஜி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பயிற்சி மேற்கொள்ளும்போது ஏற்பட்ட ஏசிஎல் பாதிப்பு காரணமாக நீண்ட காலம் ஓய்வில் இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.
ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற கையோடு ஏற்பட்ட இந்த காயம் அவரது விளையாட்டு வாழ்க்கையில் பெரும் சவாலாக அமைந்தது. ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வழிகாட்டுதலோடு மேற்கொண்ட தீவிர சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகளுக்குப் பிறகு, ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டியில் 12.99 வினாடிகளில் கடந்து தனது மீள்வரவை உறுதி செய்தார். அதனைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் நடைபெற்ற அழைப்புப் போட்டியில் 12.85 வினாடிகளில் இலக்கை எட்டி தனது முந்தைய சாதனையை மேம்படுத்தினார்.
புவனேஸ்வரில் உள்ள கலிங்க மைதானத்தில் நடைபெற்ற உலக தடகள கண்டங்களுக்கு இடையேயான வெள்ளி நிலை போட்டியில், ஜோதி யாராஜி சர்வதேச தரம் வாய்ந்த பல வீராங்கனைகளுடன் களமிறங்கினார். இந்த போட்டியில் ஜப்பானின் யூமி தனகா, கரிஸ்மா டெய்லர் மற்றும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த விட்டோரியா ஆல்வேஸ் போன்ற உலகின் முன்னணி தடகள வீராங்கனைகள் பங்கேற்றனர். இத்தகைய கடினமான போட்டியில் பங்கேற்றது, வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள உதவும் என அவரது பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹில்லியர் தெரிவித்தார்.
போட்டியின் முடிவில், ஜோதி யாராஜி 13.24 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து மூன்றாம் இடத்தைப் பிடித்தார். முதல் இடத்தை கரிஸ்மாவும் (12.96 வினாடிகள்), இரண்டாம் இடத்தை தனகாவும் (13.04 வினாடிகள்) கைப்பற்றினர். இது ஒரு பதக்கத்தை விட, அழுத்தமான சூழலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான சிறந்த பயிற்சியாக அமைந்ததாக பயிற்சியாளர் குறிப்பிட்டார். காயங்களை வென்று மீண்டும் சர்வதேச தரவரிசைப் போட்டிகளில் கவனம் செலுத்தும் ஜோதி யாராஜி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் முனைப்பில் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.









