dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார்: விசாரணைக்கு உயர்மட்ட குழு அமைப்பு

By K. ராதாகிருஷ்ணன்
73 views
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாரை விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாரை விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு.

கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது பெண் அதிகாரி ஒருவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரை விசாரிப்பதற்காக, தமிழ்நாடு அரசு நான்கு பேர் கொண்ட உள்நாட்டுக் புகாருக் குழுவை அமைத்துள்ளது. இந்த நடவடிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறை செயலாளர் ககர்லா உஷா இந்த விசாரணைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ். மதுமதி, சட்டத்துறை செயலாளர் பி. சுமதி மற்றும் அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த சுனிதா ஜோ ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையை அடுத்த அறுபது நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் (POSH) விதிமுறைகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புகார் அளித்த பெண் அதிகாரியின் பெயர் மற்றும் அடையாளங்கள் சட்டத்தின் 16-வது பிரிவின்படி ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பதால், அவர் குறித்த விவரங்கள் எதையும் அரசு வெளியிடவில்லை. இந்த விவகாரத்தில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை வரும் நவம்பர் 27-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. தற்போது, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐஜி என். காமினி இந்த வழக்கின் விசாரணையை நேரடியாகக் கண்காணித்து வருகிறார். கடந்த புதன்கிழமை, எம்எல்ஏ அருள் விக்னேஷிற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட நபரின் அடையாளம் மற்றும் விசாரணை தொடர்பான ரகசிய தகவல்களை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் உள்ள பதிவுகளை நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடியும் வரை இத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளைத் தொடர வேண்டுமென்றும், வெளிப்படையான விசாரணை உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. வரும் 27-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#கள்ளக்குறிச்சி
#அருள்விக்னேஷ்
#தமிழகஅரசு
#உயர்நீதிமன்றம்
#செய்திகள்
#Kallakurichi
#ArulVignesh
#TamilNaduGovernment
#MadrasHighCourt
#SexualHarassmentCase
#Dhinaanjal
#தினஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications