dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம்

By Admin
22/09/2026
37 views
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தி முதல்வர் சி.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கலந்துகொண்டு, காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார். அத்துடன் மாணவர்களுக்குத் தானே உணவைப் பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார். பின்னர் வகுப்பறைகளுக்குச் சென்ற அவர், மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கற்றல் சூழல் குறித்துக் கேட்டறிந்தார்.

இந்தத் திட்ட விரிவாக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 15 ஆயிரத்து 454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். முன்னதாக, கல்வி மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 217.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து இத்திட்டத்தின் மொத்த பட்ஜெட் 724 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இத்திட்டத்தின் விரிவாக்கம் செப்டம்பர் 17-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் முதலமைச்சரின் லண்டன் அரசுமுறைப் பயணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டது.

அதேவேளையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தால் செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் இத்திட்டம் தற்போதைக்குச் செயல்படுத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 6-ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உணவுக் கட்டமைப்பைப் பொறுத்தவரை, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 447 பள்ளிகளுக்குத் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக உணவு வழங்கப்படுகிறது. இதர நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் கண்காணிப்பில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் உள்ள 12 ஆயிரத்து 857 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் காலை உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஆரோக்கியமான உப்புமா, கிச்சடி மற்றும் பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்படுவதுடன், வாரத்தில் இருமுறை சிறுதானிய உணவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகையை அதிகரிப்பதோடு, அவர்களின் ஆரோக்கியத்தையும் கற்றல் திறனையும் மேம்படுத்தும் வகையில் இந்த விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம் தமிழக அரசின் முக்கிய கல்வித் திட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தமிழகஅரசு
#காலைஉணவுத்திட்டம்
#சிஜோசப்விஜய்
#அரசுப்பள்ளிகள்
#கல்வித்துறை
#TamilNaduGovt
#BreakfastScheme
#Vijay
#SchoolEducation
#TNNews
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications