காஞ்சிபுரம் அருகே பரபரப்பு: சகோதரியின் சாவுக்கு பழிவாங்க வாலிபரை கொடூரமாக கொலை செய்த இளைஞர் கைது

காஞ்சிபுரம் அருகே சகோதரியின் தற்கொலைக்கு பழிவாங்க வாலிபர் ஒருவரை காரால் மோதி வெட்டிக் கொன்ற இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கோலிவாக்கம் அருகே நடைபெற்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது சகோதரியின் மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை காரால் மோதி விபத்தை ஏற்படுத்தி, பின்னர் அவரை வெட்டிப் படுகொலை செய்த 22 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலை செய்யப்பட்டவர் மீரான் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செவிலிமேடு பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். மீரான் திருமணமானவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அதே ஜவுளிக்கடையில் பணியாற்றிய சௌந்தர்யா (24) என்பவரிடம் தனது திருமணமான தகவலை மறைத்து, அவரிடம் பழகி வந்துள்ளார். இது குறித்து அறிந்த சௌந்தர்யாவின் குடும்பத்தினர், அவரை வேலைக்கு அனுப்பவதை நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யா தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
சகோதரியின் தற்கொலைக்கு மீரான்தான் காரணம் என்று ஆத்திரத்தில் இருந்த சௌந்தர்யாவின் சகோதரர் நந்தகுமார் (22), கடந்த சில மாதங்களாக மீரானைக் கண்காணித்து வந்துள்ளார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு திருவண்ணாமலை மாவட்டம் வேம்பாக்கத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு, மீரான் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பின்தொடர்ந்து வந்த நந்தகுமார், தனது காரால் மீரானின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
விபத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்த மீரானை, நந்தகுமார் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். கொலையைச் செய்த சில மணி நேரங்களிலேயே நந்தகுமார் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கொலைக்கான காரணத்தை ஒப்புக்கொண்ட நந்தகுமாரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.









