பெண்கள் பாதுகாப்பு விவகாரம்: முதலமைச்சருக்கு கனிமொழி எம்.பி. விடுத்த முக்கிய கோரிக்கை

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் கூறி, ஒவ்வொரு பெண்ணுக்கும் மிளகுத் தெளிப்பானை (Pepper Spray) வழங்க முதலமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், காவல்துறை பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது மிளகுத் தெளிப்பான் (Pepper Spray) ஒன்றை கையில் ஏந்தியபடி பேசிய கனிமொழி, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். அண்ணன் சீர் என்ற பெயரில் பல்வேறு பொருட்களை பெண்களுக்கு வழங்குவது போல, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தற்காப்புக்காக மிளகுத் தெளிப்பானை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காவல்துறையை நம்பிப் பெண்கள் தற்காப்பைப் பாதியில் விட்டுவிட முடியாது என்றும், தங்களைக் காத்துக்கொள்ளப் பெண்கள் ஆயத்தமாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகள் மூலமாகவே இந்த மிளகுத் தெளிப்பான்களை விநியோகிக்கலாம் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.
தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் கட்சி நிர்வாகிகளே பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும், பாலியல் வன்கொடுமை புகார்களிலும் சிக்கியிருப்பதாக கனிமொழி குற்றம் சாட்டினார். பல்வேறு மாவட்டங்களில் பதிவாகியுள்ள இத்தகைய சம்பவங்கள் குறித்து முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அவர் சாடினார். மேலும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக வாக்குறுதி அளித்த அரசு, கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஆளும் கட்சி நிர்வாகிகளின் தொடர்புகள் குறித்து ஏன் மௌனம் காக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இது ஆட்சி மாற்றத்திற்கான தொடக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு முன்பு பெண்களுக்குப் பாதுகாப்பு தருவோம் என்றும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றும் அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை என்று கனிமொழி குற்றம் சாட்டினார். காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல், எதிர்க்கட்சியினரையும் திமுக நிர்வாகிகளையும் கண்காணிப்பதிலேயே முழு நேரத்தையும் செலவிடுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். தமிழகத்தின் தற்போதைய சூழலில் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், பெண்கள் தாமாகவே முன்வந்து வீதிகளில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.









