கன்னியாகுமரி: தேரிசனம் கோப்பு பகுதியில் பழையார் ஆற்று நீர் புகுந்து சாலைகள் துண்டிப்பு - விவசாயிகள் மற்றும் மக்கள் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் தேரிசனம் கோப்பு பகுதியில் பழையார் ஆற்று நீர் பெருக்கெடுத்து சாலை மற்றும் நெல் வயல்களில் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேரிசனம் கோப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அப்பகுதி வழியாகச் செல்லும் பழையார் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ஆற்றின் கரையை ஒட்டியுள்ள அருமனநல்லூர் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பது, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் தினசரி வேலைக்குச் செல்லும் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்படுவதாகவும், இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக கீழ்தேரிசனம் கோப்பு, அருமனநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் போக்குவரத்திற்கு இந்த சாலையைத்தான் பெரிதும் நம்பியுள்ளனர். தற்போது சாலை நீரில் மூழ்கியுள்ளதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கே. நீலேஷ்ராம் இதுகுறித்து கூறுகையில், கடந்த ஆண்டே ஆற்றுப் பகுதியை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தல்லாந்தி பாலம் முதல் மானத்திட்டை வரை உள்ள கிழக்கு கரைப் பகுதியில் பணிகள் முழுமையடையவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே தண்ணீர் ஆற்றில் வழிந்து சாலைகளில் புகுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இப்பகுதிகளில் உடனடியாகப் பணிகளை முடிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
விவசாயியான வி. மனோகரன் கூறுகையில், ஆற்று வெள்ளம் வயல்களில் புகுந்ததால் ஏற்கனவே பலமுறை பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த பாதிப்புகளைத் தவிர்க்க, சாலையில் மழைநீர் எளிதில் வடிந்து செல்வதற்கு வசதியாக கூடுதல் குழாய்கள் அல்லது பெரிய அளவிலான மதகுகளை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். நீர் வளத்துறை அதிகாரிகள் தரப்பில், தற்காலிக நடவடிக்கையாக நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், நிரந்தரத் தீர்வாக பழையார் ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









