கரிவிடி லட்சுமி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்: நாயகியாக அசத்தும் நடிகை ஆனந்தி

உத்தர ஆந்திர நாட்டுப்புறப் பாடகர் கரிவிடி லட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'கரிவிடி லட்சுமி' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ஆனந்தி, தற்போது தெலுங்குத் திரையுலகில் புதிய முயற்சியாக நாட்டுப்புறப் பாடகியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'கரிவிடி லட்சுமி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், உத்தர ஆந்திராவின் புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகர் கரிவிடி லட்சுமியின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கவுரி நாயுடு ஜம்மு இயக்கியுள்ள இந்தப் படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி சார்பில் கிருத்தி பிரசாத் மற்றும் டி.ஜி. விஸ்வ பிரசாத் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடிகை ஆனந்தியின் நடிப்பு மற்றும் சுறுசுறுப்பான நடன அசைவுகள் படத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளன. முறைப்படியான கல்வி வாய்ப்புகள் குறைவாக இருந்தபோதிலும், தனது விடாமுயற்சியால் எப்படி ஒரு பிரபலமான நாட்டுப்புறப் பாடகராக உருவெடுத்தார் என்பதை இந்தப் படம் அழகாகச் சித்தரிக்கிறது. சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்திற்காகத் தான் உழைத்ததாகவும், இது தனது வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் என்றும் நடிகை ஆனந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, நாட்டுப்புற இசையின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் 'நல்ல ஜீரகரா மொக்க' மற்றும் 'கோசினி கொயகுரா' ஆகிய பாடல்கள் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன. இசை அமைப்பாளர் சரண் இந்தப் படத்திற்காக வழங்கியுள்ள இசை, பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பு, படத்தின் பிரம்மாண்டத்திற்கு வலுசேர்த்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் ஆனந்தியுடன் இணைந்து ராக் மயூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வி.கே. நரேஷ், ராசி, அவசரல ஸ்ரீனிவாஸ், சரண்யா பிரதீப், அங்கித் கொய்யா, ஷகலகா சங்கர் மற்றும் எல்.பி. ஸ்ரீராம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆதித்யா ஜவ்வாடி ஒளிப்பதிவையும், பேபி சுரேஷ் பீம்கனி கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில், இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.









