ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு: அமைச்சர் கே.என்.நேருவின் நெருங்கிய உதவியாளர் கைது

நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் அமைச்சர் கே.என்.நேருவின் நெருங்கிய உதவியாளர் கவி பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசுத் துறைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் பெரும் நிதி முறைகேடு தொடர்பான வழக்கில், முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளில் கடந்த 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அரசு ஒப்பந்தப் பணிகளில் சுமார் ரூ.1,020 கோடி அளவுக்கு டெண்டர் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய கவி பிரசாத் என்பவரை அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள கவி பிரசாத், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் நெருங்கிய உதவியாளராக அறியப்படுகிறார். இவர் தனியார் நிறுவனமான டிவிஹெச் (TVH) குழுமத்தின் முன்னாள் இயக்குநராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு இடையே இடைத்தரகராகச் செயல்பட்டு, முறைகேடான பணப் பரிமாற்றங்களை ஒருங்கிணைத்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, கட்சி நிதி என்ற பெயரில் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாகவும், டெண்டர் விவரங்களை முன்கூட்டியே சிலருக்குத் தெரிவித்து ஒப்பந்தங்களை நிர்ணயித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR), கவி பிரசாத் உட்பட மொத்தம் 13 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன் மற்றும் என்.ரவிச்சந்திரன், டிவிஹெச் நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய நபர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் சில அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்குவர். சென்னை அமலாக்கத் துறை மண்டல கூடுதல் இயக்குநர் அப்யுதய ஏ. ஆனந்த் அளித்த 258 பக்க அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற கவி பிரசாத், லுக் அவுட் நோட்டீஸ் காரணமாக சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது அவர் சுங்கத்துறை அதிகாரிகளால் ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆதாரங்கள் மற்றும் விசாரணையின் தீவிரத்தன்மை அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட உள்ளார். இந்த அதிரடி கைது தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









