கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு இனி ஆன்லைன் டிக்கெட்: போக்குவரத்து நெரிசலை குறைக்க வனத்துறை அதிரடி

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை முன்கூட்டியே ஆன்லைனில் செலுத்தும் புதிய வசதியை வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மலைப்பிரதேசமான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, வனத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு இனி ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலங்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே இந்த புதிய திட்டத்தின் முதன்மையான நோக்கம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kodaikanalwildlifesanctuary.com/ என்ற முகவரியில் தங்களுக்குத் தேவையான டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு ஆன்லைனில் பெறப்பட்ட டிஜிட்டல் அல்லது அச்சிடப்பட்ட ரசீதுகளை சம்பந்தப்பட்ட சுற்றுலா இடங்களின் நுழைவு வாயில்களில் காண்பித்து உள்ளே செல்ல முடியும். இதன் மூலம் நுழைவுச் சீட்டு வாங்க வரிசையில் காத்திருக்கும் நேரம் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானலில் உள்ள பில்லர் ராக்ஸ், குணா குகைகள், பைன் காடு மற்றும் மாய்ர் பாயிண்ட் ஆகிய நான்கு முக்கிய சுற்றுலா இடங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் செல்லும்போது, நுழைவுக்கட்டணம் செலுத்துவதில் நிலவிய தாமதம் காரணமாக சாலைகளில் நீண்ட தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்தது. முன்பு இருந்த கையேடு முறை மற்றும் கியூஆர் கோடு ஸ்கேன் செய்யும் முறைகளில் இருந்த தொழில்நுட்பச் சிக்கல்கள் மற்றும் மலைப்பகுதிகளில் நிலவும் இணையதளத் தொடர்பு குறைபாடுகள் காரணமாக பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது.
இந்த சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோர் இணைந்து இந்த புதிய ஆன்லைன் முன்பதிவு முறையை வடிவமைத்துள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மலையேற்றப் பாதைகளுக்கும் ஜூலை மாதம் முதல் ஆன்லைன் டிக்கெட் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வரும் முன்பே தங்களின் பயணத் திட்டத்தை உறுதி செய்து, ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.









