dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

கொளத்தூர் தேர்தல் முடிவு விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

By Admin
31/08/2026
57 views
கொளத்தூர் தேர்தல் முடிவு விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நிலவிய குளறுபடிகள், வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் இயந்திரங்களின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஒரு தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 5 சதவீதத்தை உடனடியாக சரிபார்க்க வேண்டும் என்பது கட்டாயமாகும் என்று வாதிட்டார். இருப்பினும், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, தேர்தல் ஆணையம் சுமார் 45 நாட்கள் தாமதமாகவே இந்த சரிபார்ப்புப் பணிகளை மேற்கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, தேர்வு செய்யப்பட்ட 14 இயந்திரங்களில் பல இயந்திரங்கள் சரியாகச் செயல்படவில்லை என்றும், வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களுக்கு இடையே குளறுபடிகள் ஏற்பட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். வாக்குச்சாவடி எண் 208-ல் மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் கண்டறியப்படாதது அதிர்ச்சியளிக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் முடிவுகள் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தேர்தல் மனு (Election Petition) தாக்கல் செய்வதுதானே சட்டரீதியான தீர்வாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த கபில் சிபல், தேர்தல் ஆணையத்தின் 45 நாள் தாமதத்தால் தங்களால் தேர்தல் மனுவைத் தாக்கல் செய்ய முடியவில்லை என்றும், எனவே அரசியலமைப்பு சட்டப்பிரிவு 329-ன் கீழ் உள்ள கட்டுப்பாடுகள் இந்த வழக்கிற்குப் பொருந்தாது என்றும் வாதிட்டார். மேலும், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் (EVM) மீண்டும் எண்ண வேண்டும் என்றும், விவிபேட் (VVPAT) இயந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளை நூறு சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மறுபுறம், தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஜி. ராஜகோபாலன் மற்றும் தாமா சேஷாத்ரி நாயுடு ஆகியோர், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பது சட்டப்படி தவறு என்று வாதிட்டனர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தல் மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 226-ன் கீழ் இந்த மனுவை அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மனுவை அனுமதித்தால் அது தவறான முன்னுதாரணத்திற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் எச்சரித்தனர். இதற்கிடையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) எதிர்த்து ஸ்டாலின் தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவை அவர் திரும்பப் பெற்றார், அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#சென்னைஉயர்நீதிமன்றம்
#கொளத்தூர்
#திமுக
#முக்கஸ்டாலின்
#தேர்தல்ஆணையம்
#MadrasHighCourt
#Kolathur
#MKStalin
#DMK
#ElectionCommission
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications