கோவளத்தில் தென்னிந்திய மண்டல கவுன்சில் கூட்டம்: மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார் முதல்வர் ஜோசப் விஜய்

கோவளத்தில் நடைபெறும் 31-வது தென்னிந்திய மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்துப் பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் நடைபெறவுள்ள 31-வது தென்னிந்திய மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் சந்தித்துப் பேசினார். பதவியேற்ற பிறகு முதலமைச்சர் ஜோசப் விஜய் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாக இது கருதப்படுகிறது. இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமான ஒன்று என்று அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவளத்தில் உள்ள கடற்கரையோர சொகுசு விடுதி ஒன்றில் நடைபெறும் இந்த உயர்மட்ட கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்குகிறார். மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினைகள், நதிநீர் பங்கீடு மற்றும் பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் நதிநீர் பகிர்வு தொடர்பான நீண்டகால சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதே இந்த கூட்டத்தின் முதன்மை நோக்கமாக உள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்க்கா, கேரள மாநிலத்தின் சார்பில் வி.டி. சதீசன் மற்றும் கர்நாடகாவின் சார்பில் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தென்னிந்திய மண்டல கவுன்சிலில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுடன் புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களும் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கும், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் சுமூகமான உறவை உறுதிப்படுத்துவதற்கும் இந்த மண்டல கவுன்சில் ஒரு சிறந்த தளமாகச் செயல்படுகிறது என்று மத்திய அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த முக்கியமான கூட்டத்தைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷா மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்கரை கோவிலைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளார்.









