கிருஷ்ணகிரி: சுதந்திர தின விழாவில் ஆசிரியர்கள் வராததால் தேசியக் கொடியேற்றுவதில் இழுபறி - ஆட்சியர் தலையீட்டால் தீர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் டீ.பாலயூர் அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழாவின் போது ஆசிரியர்கள் யாரும் பணியில் இல்லாததால் தேசியக் கொடியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெட்டமுகிலாலம் ஊராட்சிக்கு உட்பட்ட டீ.பாலயூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றப்படாமல் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக சுதந்திர தினத்தன்று பள்ளி வளாகங்களில் தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்படும் நிலையில், மதியம் வரை எந்தவொரு ஆசிரியரும் பள்ளிக்கு வராததால் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது.
பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லாததை அறிந்த கிராம மக்கள், இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடக்கத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இது குறித்த தகவல் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆட்சியரின் உத்தரவின் பேரில், உடனடியாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சி.நரசிம்மன் விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், கிரிநாயனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆர்.அருண்குமார் என்பவர் அவசரமாக அந்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் பள்ளிக்குச் சென்றடைந்த பிறகு, மதியம் 1.30 மணியளவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின விழா நடைபெற்றது.
இந்த குளறுபடி குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சி.நரசிம்மன் விளக்கம் அளிக்கையில், டீ.பாலயூர் தொடக்கப் பள்ளியில் மொத்தம் 33 மாணவர்கள் பயின்று வருவதாகவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த ஒரு வாரமாக ஆர்.அருண்குமார் என்பவர் பணியமர்த்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். வெள்ளிக்கிழமையுடன் அவரது பணி நியமனம் முடிவடைந்த நிலையில், சுதந்திர தின விழாவுக்கு யாரை அனுப்புவது என்பது குறித்த குழப்பம் நிலவியதே இந்த தாமதத்திற்கு காரணம் என அவர் குறிப்பிட்டார். மேலும், ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்ததும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட கேலமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலர் உள்ளிட்டோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய கிராம மக்கள், அந்தப் பள்ளியில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் பள்ளியில் பணிபுரிந்த கிருஷ்ணன் என்ற ஆசிரியர் மீது புகார்கள் எழுந்ததால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு தற்காலிக ஆசிரியர்களை வைத்தே பள்ளி இயங்கி வருவது கல்வித் தரத்தைப் பாதிக்கும் என அவர்கள் கவலை தெரிவித்தனர். மாணவர்களின் நலன் கருதி முறையான நிரந்தர ஆசிரியர்களை உடனடியாக நியமிப்பதோடு, தங்கள் பகுதிக்குச் செல்லும் சேதமடைந்த சாலைகளையும் அரசு சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.









