புதிய கிரைம் த்ரில்லர் படத்தில் களமிறங்கும் எல்.கே.அக்ஷய் குமார்: உற்சாகத்தில் ரசிகர்கள்

சிறை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் எல்.கே.அக்ஷய் குமார் நடிக்கும் புதிய குற்றப் பின்னணிக் கதையம்சம் கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
சிறை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் எல்.கே.அக்ஷய் குமார், தற்போது தனது அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார். பெயர் சூட்டப்படாத இந்த புதிய திரைப்படம், ஒரு விறுவிறுப்பான குற்றப் பின்னணிக் கதையம்சம் (Crime Drama) கொண்ட படமாக உருவாக்கப்பட உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொடக்க விழா சென்னையில் சமீபத்தில் விமரிசையாக நடைபெற்றது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் இப்படத்தைத் தயாரிக்க, எல்.கே.விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.
இந்த திரைப்படத்தின் மூலம் விஷ்ணு அமரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் பிரபல இயக்குநர் ஹெச்.வினோத்திடம் தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் ஜனநாயகம் போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இப்படத்தின் தொடக்க விழாவில் ஹெச்.வினோத், சிவா, ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், சுரேஷ் ராஜகுமாரி மற்றும் விக்னேஷ் வடிவேல் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நடிகர் எல்.கே.அக்ஷய் குமாருடன் இணைந்து முன்னணி மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களாக ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி, இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் மற்றும் படத்தொகுப்பாளர் கலைவாணன் ஆர். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கலை இயக்குநராக பி.எஸ்.ஹரிஹரன், ஆடை வடிவமைப்பாளராக ஆர்த்தி நீலகிருஷ்ணன் மற்றும் சண்டைப் பயிற்சியாளராக ஆக்ஷன் சந்தோஷ் ஆகியோர் பணிபுரிகின்றனர்.
சென்னை, கொடைக்கானல் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகும் இப்படம், அக்ஷய் குமாரின் நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ராவடி திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக எல்.கே.அக்ஷய் குமார் நடித்துள்ளார். பாசில் ஜோசப் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம், வரும் டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.









