dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

இராமநாதபுரம் அருகே கடன் வசூல் முகவர் படுகொலை: பணம் கேட்டுச் சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்

By Admin
10/10/2026
74 views
இராமநாதபுரம் அருகே கடன் வசூல் முகவர் படுகொலை: பணம் கேட்டுச் சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்

இராமநாதபுரம் அருகே கடன் வசூல் முகவர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே கடன் வசூல் முகவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, பனைத்தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வலந்தரவையைச் சேர்ந்த பிரேம்குமார் (26) என்ற தனியார் நிதி நிறுவன ஊழியர், அக்டோபர் 5-ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது தந்தை முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் கடைசியாக பணி நிமித்தமாக வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பாததால், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையின் போது, பிரேம்குமார் கடைசியாக தூத்திவலசையைச் சேர்ந்த காளிதாஸ் (38) என்பவருடன் பேசியது கண்டறியப்பட்டது. காளிதாஸ் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் கடன் பெற்றிருந்தார். அவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியபோது, பிரேம்குமார் பணத்தை வசூலித்துவிட்டு சென்றுவிட்டதாக முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். இருப்பினும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினருக்கு, இருவரும் சந்தித்துக்கொண்டது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், காளிதாஸ் தான் பிரேம்குமாரைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

குற்றவாளி காளிதாஸ் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது குடும்பத்தினர் மற்றும் மகள் குறித்து பிரேம்குமார் அவதூறாகப் பேசியதால் ஆத்திரமடைந்ததாகத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, அக்டோபர் 5-ஆம் தேதி மாலை பணம் வசூலிப்பதற்காகத் தன்னைச் சந்திக்க வந்த பிரேம்குமாரை, மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், தோப்புவலசை பகுதியில் உள்ள ஒரு பனைத்தோப்பில் உடலைப் புதைத்துவிட்டு, பிரேம்குமாரின் இருசக்கர வாகனத்தைக் கைவிட்டு, அவரது செல்போன்களை அருகில் இருந்த தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் வீசியதாகத் தெரியவந்தது. மேலும், பிரேம்குமார் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்து அடகு வைத்ததும் விசாரணையில் வெளிவந்தது.

வெள்ளிக்கிழமை காலை வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில், காளிதாஸ் சுட்டிக்காட்டிய இடத்தில் புதைக்கப்பட்டிருந்த பிரேம்குமாரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. உடற்கூறாய்விற்காக உடல் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து பிரேம்குமாரின் உறவினர்கள் மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#இராமநாதபுரம்
#கொலை வழக்கு
#கடன் வசூல் முகவர்
#தமிழக செய்திகள்
#குற்றச்செயல்
#Ramanathapuram
#Collection agent murder
#Crime news
#Tamil Nadu news
#Police investigation
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications