மக்களவை மறுவரையறை மசோதா: திமுகவின் கோரிக்கைகள் ஏற்பு - ஆதரவளிக்க திட்டம்?

மக்களவைத் தொகுதி மறுவரையறை மசோதாவில் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் திமுக ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பான புதிய வரைவு மசோதாவில் திமுக முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த இறுதி முடிவை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்குப் பிறகு திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.
வெளியிடப்பட்டுள்ள வரைவு மசோதாவின்படி, 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் சீராக உயர்த்துவதற்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதி ஒதுக்கீடுகள் மற்றும் எல்லைகளை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதாவது 2051-ஆம் ஆண்டு வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு முக்கிய நிபந்தனைகளும் திமுகவின் நீண்டகால கோரிக்கைகளாக இருந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் மக்களவைத் தொகுதிப் பங்கீட்டில் எந்தவித சமரசமும் இருக்காது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார். மக்களவையில் தமிழ்நாட்டிற்கு தற்போதுள்ள 7.18 சதவீத இடப்பங்கீடு எந்தச் சூழலிலும் குறையக்கூடாது என்பதிலும், தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும் அந்த விகிதாச்சாரம் மாறாமல் இருக்க வேண்டும் என்பதிலும் திமுக உறுதியாக உள்ளது. கடந்த 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், இந்த நிலைப்பாட்டை அக்கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மறுவரையறை மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் புதிய மறுவரையறை மேற்கொள்ளப்படும் சூழல் உருவாகும். இது தமிழகம் போன்ற மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கொள்கை ரீதியாக மறுவரையறையை ஆதரிப்பதாக திமுக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பில் இருந்து இந்த மசோதா தொடர்பாக திமுகவை யாரும் அதிகாரப்பூர்வமாகத் தொடர்பு கொள்ளவில்லை என்றும், தற்போதைய சூழலில் கட்சியின் முடிவு சுயாதீனமாகவே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.









