லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் புதிய படம்: 'RX' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு 'RX' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ், தனது ஜி ஸ்குவாட் (G Squad) தயாரிப்பு நிறுவனம் மூலம் புதிய திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர் தயாரிக்கும் புதிய படத்திற்கு RX என்று அதிகாரப்பூர்வமாக தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில், இப்படத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் தோற்றப் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் உண்மையை உரக்கச் சொல்லும் குரல் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளதால், படம் சமூக அக்கறை கொண்ட கதைக் களத்தைக் கொண்டிருக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ரெஜினா கசாண்ட்ராவுடன் இணைந்து ரமேஷ் திலக், நாசர் மற்றும் ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பல திறமையான நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் விஷால் வெங்கட்டும், நடிகர் நாசரும் ஏற்கனவே சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் பாம் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஹரிஹரன் ராஜுவின் கதைக்கு, அஷ்மீரா ஐயப்பன் வசனம் எழுதியுள்ளார்.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் மிகவும் வலுவான கலைஞர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை பிரசன்னா ஜி.கே கவனிக்க, கலை இயக்குனராக மனோஜ்குமார் கே பணியாற்றியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். இப்படத்தின் இணை தயாரிப்பாளராக பிரதீப் பூபதி பணியாற்றியுள்ளார்.
தற்போது படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், திரையரங்குகளில் வெளியாகும் தேதியை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, லோகேஷ் கனகராஜ் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் பென்ஸ் உள்ளிட்ட படங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என இருமுனைப் பணிகளிலும் பிஸியாக இருக்கும் லோகேஷின் அடுத்தடுத்த சினிமா முயற்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.









