பாலஸ்தீன ஆதரவு கருத்து: எட் ஷீரனின் இசைப் பயணத்திலிருந்து மேக்ல்மோர் நீக்கம்

பாலஸ்தீன ஆதரவு கருத்துக்களை வெளியிட்டதற்காக பிரபல ராப் பாடகர் மேக்ல்மோர், எட் ஷீரனின் இசைப் பயணத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிரபல ஹாலிவுட் இசைக்கலைஞர் எட் ஷீரனின் இசைப் பயணத்தில் (The Loop tour) பங்கேற்கவிருந்த முன்னணி ராப் பாடகர் மேக்ல்மோர், அந்தத் தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் நியூ ஜெர்சியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது, மேக்ல்மோர் மேடையில் பாலஸ்தீன ஆதரவு கருத்துக்களை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் பங்கேற்கவிருந்த பல மைதானங்கள் மற்றும் நிர்வாகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், எட் ஷீரனின் குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தத் தகவலை உறுதிப்படுத்திய மேக்ல்மோர், அமெரிக்காவிலுள்ள பல முக்கிய அரங்கங்கள் மற்றும் மைதானங்கள், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை ரத்து செய்யப்போவதாக மிரட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது இசையமைப்பின் மூலம் பாலஸ்தீன மக்களின் துயரங்களை நீண்டகாலமாக வெளிப்படுத்தி வருவதாகவும், தற்போது உலகின் மிகப்பெரிய கலைஞர் ஒருவருடன் இணைந்து பெரிய மைதானங்களில் பாடும்போது, இத்தகைய கருத்துக்கள் நிர்வாகத்திற்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சுதந்திர பாலஸ்தீனம் என்ற கோஷத்தை எழுப்புவது தற்போது ஒரு பெரிய அபாயமாகப் பார்க்கப்படுவதாக அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மெசினா டூரிங் குரூப் என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேக்ல்மோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க முடியாது என்று பல மைதான உரிமையாளர்கள் தன்னிடம் தெளிவாகக் கூறிவிட்டதாகவும், இதனால் ஒட்டுமொத்த இசைச் சுற்றுப்பயணமே ரத்தாகும் சூழல் உருவானதால் தவிர்க்க முடியாமல் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நியூ இங்கிலாந்து பேட்ரியாட்ஸ் அணியின் உரிமையாளர் ராபர்ட் கிராஃப்ட், மேக்ல்மோரின் கருத்துக்கள் யூத சமூகத்திற்கு வேதனையளிப்பதாகக் கூறி, ஜிம் லெட் மைதானத்தில் அவர் பாடுவதற்குத் தடை விதித்திருந்தார்.
மேக்ல்மோர் தனது இசை நிகழ்ச்சியின் போது, காசாவில் கொல்லப்பட்ட ஹிந்த் ரஜாப் என்ற ஐந்து வயது சிறுமியின் நினைவாக 'ஹிந்த்ஸ் ஹால்' என்ற போராட்டப் பாடலைப் பாடினார். அந்த தருணத்தில் 'ஃப்ரீ பாலஸ்தீன்' (Free Palestine) என்ற முழக்கத்தை எழுப்பிய அவர், தனது கருத்துக்கள் எந்தவொரு மதத்தையோ அல்லது இனத்தையோ தாக்குவதற்காக அல்ல, அமைதி மற்றும் மனித உரிமைகளுக்காகவே என்று விளக்கமளித்துள்ளார். எட் ஷீரன் மீது தமக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்றும், இருப்பினும் உண்மை நிலையைச் சொல்வதே தனது பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.









