பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றி செல்லாது: முதலமைச்சர் விஜய்க்கு எதிரான வழக்கு விசாரணைக்கு அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம், முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, அதைத் தள்ளுபடி செய்ய மறுத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்யின் தேர்தல் வெற்றியைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுவை தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் விஜய் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அந்தத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளரான எஸ். தினேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் முக்கியக் கட்டமாக, விஜய்யின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்கவில்லை என்றும், வாக்காளர்களைத் தவறாக வழிநடத்தியதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி வாலாஜாபாத் சார்-பதிவாளர் அலுவலகப் பதிவின்படி, பண்ருட்டி கிராமத்தில் ரூ. 30 கோடி மதிப்பிலான மூன்று ஏக்கர் நிலத்தை வாங்கிய விவரத்தை விஜய் மறைத்துள்ளதாக மனுதாரர் வாதாடினார். மேலும், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் காட்டப்பட்டுள்ள கொடைக்கானல் வில்லிபட்டி கிராமத்தில் உள்ள நிலம், உண்மையில் புறம்போக்கு நிலம் என்றும் அவர் குறிப்பிட்டார். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 33 A-க்கு முரணானது என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டனர்.
இந்த வழக்கில் வாதிட்ட முதலமைச்சர் விஜய்யின் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், சொத்து விவரங்களை முழுமையாக வெளிப்படுத்தாததை குற்றப் பின்னணியுடன் ஒப்பிட முடியாது என்று வாதிட்டார். விஜய் ஏற்கனவே பெரும் பணக்காரர் என்பது பொதுமக்களுக்குத் தெரிந்த விஷயம் என்றும், சொத்து மதிப்பு சிறிய அளவில் மாறுபடுவதால் மட்டும் ஒருவரைத் தேர்ந்தெடுக்காமல் இருக்க வாக்காளர்கள் முன்வர மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்புமனுவை ஆய்வு செய்யும் போது, இதுபோன்ற விரிவான விசாரணைகளைச் செய்ய முடியாது என்பதால், வழக்கின் உண்மைத்தன்மையை நீதிமன்றம் ஆராய வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
நீதிபதி வி. லட்சுமிநாராயணன் தனது உத்தரவில், சொத்து மற்றும் வருமான விவரங்களை மறைத்தது என்பது தேர்தல் வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான அம்சம் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில், மனுதாரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று உடனடியாக முடிவுக்கு வர முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிய முதலமைச்சரின் மனுவை நிராகரித்தார். இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி-கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் திருச்சி-கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.









