சர்பேசி சட்ட வழக்குகள்: வழக்கறிஞர் கட்டணத்தை தன்னிச்சையாக நிர்ணயிக்கக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சர்பேசி சட்ட வழக்குகளில் வழக்கறிஞர் ஆணையர்களுக்கு நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை, பணிச் சுமை மற்றும் சொத்தின் மதிப்பிற்கு ஏற்ப மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்பேசி (SARFAESI) சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், சொத்துக்களைக் கைப்பற்றும் பணிக்காக நியமிக்கப்படும் வழக்கறிஞர் ஆணையர்களுக்கு (Advocate Commissioner) நிர்ணயிக்கப்படும் கட்டணம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இனி தன்னிச்சையாகக் கட்டணங்களை நிர்ணயிக்கக் கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. சொத்தின் மதிப்பு மிகக் குறைவாக இருக்கும் வழக்குகளில் கூட வழக்கறிஞர் ஆணையருக்கு 80,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குறிப்பாக, 2.21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்குக் கூட 80,000 ரூபாய் கட்டணம் வசூலித்தது நியாயமற்றது என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இதனை ஒரு பொதுவான கட்டணமாகக் கருதக்கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
வழக்கறிஞர்களுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் போது, அந்த வழக்கில் உள்ள நிலுவைத் தொகை, சொத்தின் சந்தை மதிப்பு, சொத்து அமைந்துள்ள இடம், வாரண்டின் கீழ் வரும் சொத்துகளின் எண்ணிக்கை மற்றும் பயணத் தூரம் ஆகியவற்றை முறையாகக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். பணியின் தன்மைக்கு ஏற்ப கட்டணம் விகிதாச்சாரப்படி அமைய வேண்டும் என்றும், ஒரே மாதிரியான தொகையை அனைத்து வழக்குகளுக்கும் நிர்ணயிப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், சர்பேசி சட்டம் பிரிவு 14(1)-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே காலதாமதம் ஏற்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்பானது சொத்து ஜப்தி தொடர்பான சட்ட நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையையும் நியாயத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.









