நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் விமர்சித்து போராட்டம் நடத்த அனுமதி இல்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் விமர்சித்து நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது மற்றும் அச்சுறுத்துவது நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீதிபதிகளை குறிவைத்து நடத்தப்படும் எந்தவொரு போராட்டத்திற்கும் அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னை சேர்ந்த ஆர். கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த முக்கிய தீர்ப்பை வழங்கியது. மதமாற்றம் அடைந்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை விமர்சித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய போராட்டங்களை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கோ அல்லது அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கோ குடிமக்களுக்கு முழு உரிமை உள்ளது என்பதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆனால் சட்டபூர்வமான கருத்துரிமைக்கும், தனிநபர் மீதான தாக்குதலுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருப்பதை சுட்டிக்காட்டினர். ஒரு தீர்ப்பின் சட்டப்பூர்வமான தன்மையை விமர்சிப்பதும், அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதியை தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசுவதும் வெவ்வேறானவை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. நீதிபதிகளை அவதூறாகப் பேசுவது, மிரட்டல் விடுத்தல் அல்லது திட்டமிட்ட வகையில் மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பது ஆகியவை சட்டத்தின் அடித்தளத்தையே அசைக்கும் செயலாகும் என்று அமர்வு எச்சரித்துள்ளது.
தமிழக காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இது தொடர்பான போராட்டங்களுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் உள்ளூர் காவல் சட்டங்களின் கீழ் மிகக் கடுமையான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தவொரு காரணத்தைக் கொண்டும் ஒரு நீதிபதியை அவமதிக்கும் அல்லது மிரட்டும் நோக்கத்தில் நடைபெறும் பொதுக் கூட்டங்களுக்கோ அல்லது பேரணிகளுக்கோ அனுமதி வழங்கப்படக்கூடாது. ஒருவேளை அனுமதி பெற்று நடத்தப்படும் கூட்டங்கள், திடீரென தனிநபர் தாக்குதலாக மாறினால், உடனடியாக அந்த நிகழ்வை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அதேநேரத்தில், நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பான அனைத்து விதமான பொது விவாதங்களையும் அல்லது அமைதியான போராட்டங்களையும் முழுமையாகத் தடை செய்வது ஜனநாயக உரிமையைப் பாதிக்கும் என்றும் நீதிமன்றம் கருதியது. எனவே, பொது விவாதங்கள் மற்றும் ஆரோக்கியமான விமர்சனங்களுக்குத் தடையில்லை என்றும், ஆனால் நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், சாதிய ரீதியிலான வசைபாடும் செயல்களும் கருத்துரிமை என்ற வரம்பிற்குள் வராது என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்க இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் அவசியமென நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.









