தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கும் அதிகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய விளக்கம்

தடை செய்யப்பட்ட அமைப்புகள் பயன்படுத்தாத இடங்களில் காவல் ஆணையருக்கு சீல் வைக்கும் அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்புகள் பயன்படுத்தாத கட்டிடங்களுக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் காவல் ஆணையர் சீல் வைக்க அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தை, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்புக்கு வாடகைக்கு விட்டிருந்த நிலையில், அந்த அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு அந்த கட்டிடம் காவல்துறையினரால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து கட்டிட உரிமையாளர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. அந்த அமைப்பு தடை செய்யப்பட்ட உடனேயே, பெரியமேட்டில் அவர்கள் வாடகைக்கு இருந்த கட்டிடத்தை காலி செய்துவிட்டனர். இருப்பினும், காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் அந்த இடத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அந்த சீலை அகற்றுமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து காவல் ஆணையர் மற்றும் வேப்பேரி உதவி ஆணையர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 8-ன் கீழ், தடை செய்யப்பட்ட அமைப்புகள் அல்லது அதனுடன் தொடர்புடைய நபர்கள் அந்த கட்டிடத்தை பயன்படுத்துவதைத் தடுக்கவே காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பின் எந்தவிதமான அசையும் பொருட்களும் கண்டறியப்படாத சூழலில், அந்த கட்டிடத்தைப் பூட்டி சீல் வைத்தது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், இது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட செயல் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக எவ்வித நியாயமான காரணமும் இன்றி உரிமையாளருக்கு சொந்தமான கட்டிடத்தை காவல்துறை முடக்கி வைத்துள்ளதை சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம், உடனடியாக 48 மணி நேரத்திற்குள் அந்த கட்டிடத்தில் உள்ள பூட்டு மற்றும் சீல்களை அகற்றி உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. காவல்துறை இந்த வழக்கில் உரிய ஆதாரங்களை முன்வைக்கத் தவறியதோடு, சட்டத்தின் பிரிவுகளை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த தீர்ப்பு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் அதிகார வரம்பு குறித்து மிக முக்கியமான சட்ட முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.









