சட்டத்திற்கு மேலானவர் யாரும் இல்லை: நீதிமன்றத்தில் ஆஜராகாத அமைச்சர் மேரி வில்சனை சாடிய சென்னை உயர் நீதிமன்றம்

புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகாத தமிழக நிதியமைச்சர் மேரி வில்சனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் என். மேரி வில்சன், தனது மைத்துனியின் குடும்பத்தினரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், அமைச்சர் பதவியில் இருப்பதால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நினைக்க வேண்டாம் என்று எச்சரிக்கும் வகையில் காரசாரமான கேள்விகளை எழுப்பினார்.
புதுச்சேரி நீதிமன்றம் பிறப்பித்த சம்மன்களை ரத்து செய்யக் கோரியும், வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரியும் அமைச்சர் மேரி வில்சன் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி கூறுகையில், நீங்கள் என்ன இங்கிலாந்து மன்னரா? சட்டத்திற்கு யாரும் அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும் என்று சாடினார். மேலும், நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது நீதிமன்றத்திற்கு வந்தீர்கள், ஆனால் தற்போது அமைச்சரான பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாஜா மொய்தீன் கிஸ்தி, தனது தரப்பு விளக்கம் அளிக்கும்போது, அமைச்சர் தற்போது வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், எனவே ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அவரை நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றும் கோரினார். மேலும், தனது சகோதரரின் குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு, குழந்தைகள் தத்தெடுப்பு மற்றும் அந்த குழந்தைகளை நடத்த விதம் குறித்து ஏற்பட்ட மோதல்களே காரணம் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
புதுச்சேரி நீதிமன்றத்தில் புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தற்போது தாக்கல் செய்துள்ள மனுவை திரும்பப் பெறுவதாகவும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கைத் திரும்பப் பெற அனுமதி வழங்கியதோடு, குறிப்பிட்ட காலத்திற்குள் அமைச்சர் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார்.









