பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி அபராதம்: காலதாமத மனுவை நிராகரித்து உத்தரவு

தகுதியற்ற காரணங்களைக் கூறி நீதிமன்றத்தில் காலதாமத மனு தாக்கல் செய்த பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரின் பணிக்கால பலன்கள் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, பள்ளி கல்வித்துறை சார்பில் மேல்முறையீடு செய்யத் திட்டமிடப்பட்டது. இதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சுமார் 809 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த காலதாமதத்திற்குத் தகுதியற்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள் மனு தாக்கல் செய்திருந்ததை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் ஈ. மனோகரன் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி 2023-ம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, தற்போது 2026-ம் ஆண்டில் மட்டுமே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியது. திருநாவலூர், அங்கவை சங்கவை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், விடுமுறைகள், தேர்வுகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகள் எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகக் காரணம் கூறப்பட்டுள்ளது. மேலும், கோடை விடுமுறையையும் ஒரு காரணமாக முன்வைத்தது நீதிமன்ற நடவடிக்கைகளை கேலிக்குள்ளாக்கும் செயல் என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் நடைமுறைகளை ஏளனம் செய்யும் வகையில் செயல்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தத் தொகையை நான்கு வாரங்களுக்குள் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்தத் தேவையற்ற காலதாமதத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணியில், ஆர். புவனேஸ்வரி என்ற ஆசிரியர் தனது பணிக்காலம் முறைப்படுத்தப்படுவதற்கு முன்பு, அதாவது 1985 முதல் 1992 வரை பணியாற்றிய காலத்தையும் பணிக்கால பலன்கள் கணக்கிடுதலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அவருக்கு சாதகமாகத் தனி நீதிபதி தீர்ப்பளித்திருந்த நிலையில், அதை எதிர்த்து அதிகாரிகள் முறையற்ற விதத்தில் காலதாமத மனுவைத் தாக்கல் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதித்துறையின் நேரத்தை வீணடித்தது மட்டுமின்றி, ஒரு ஆசிரியரின் உரிமையைப் பறிக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டது சட்ட ரீதியான விளைவுகளைச் சந்தித்துள்ளது.









